ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு |L&T நிறுவனம் அறிவிப்பு!
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக இருப்பவர், எஸ்.என்.சுப்ரமணியன். இவர், தன்னுடைய நிறுவனத்தில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பிரிவின் சுமார் 5,000 பெண் ஊழியர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தாய் நிறுவனமான L&Tயின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நிதி சேவைகள் அல்லது தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அதன் துணை நிறுவனங்களுக்கு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 60,000 ஊழியர்களில் 5,000 பெண் ஊழியர்கள் (9%) உள்ளனர்.
முன்னதாக ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் மாதவிடாய் விடுப்பு அறிவித்திருந்தன. இன்னும் சில நிறுவனங்கள் இதைப் பின்பற்ற உள்ளன. பீகார், ஒடிசா, சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பரிந்துரைத்திருந்தது. மறுபுறம், வாரத்துக்கு 90 மணிநேரம் உழைக்க வேண்டும் என்றும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வளவு நேரம்தான் மனைவியைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சமீபத்தில் கூறியிருந்தது சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றியிருந்தது.