பிகாரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஜூன் 24ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இப்பணிகளின் முடிவில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களர் அட்டைகளை பெற்றிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் என 65 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்களர்கள் அம்மாநிலத்தில் நீக்கப்பட்டனர். இது, இந்திய அளவில் பேசுபொருளான நிலையில், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து பாஜக அரசு நீக்கம் செய்வதாக, எஸ்.ஐ.ஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் போராட்டங்களை நடத்தி வந்தன.
இதற்கிடையில், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எஸ்.ஐ.ஆர். அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 27-அன்று அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்கியது. எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பாக 50.99 கோடி வாக்களர்கள் இந்த மாநிலங்களில் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் 5.18 கோடி வாக்களர்கள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நீக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தான், விடுபட்ட மாநிலங்களுக்கான மூன்றாம் கட்ட எஸ்.ஐ.ஆர் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தான், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் விவகாரங்கள், கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய பிரிவுகள்,தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிராகக் கூறப்படும் பாகுபாடு குறித்துக் கவலை தெரிவித்ததுடன் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்தியத் தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான சுதந்திரக் குழு என்ற கல்வியாளர்கள் குழு எஸ்.ஐ.ஆர். தொடர்பாக ஆகஸ்ட் 2025 மற்றும் ஏப்ரல் 2026-ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தில் புகார்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்தக் கடிதம் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசுக்கு ஐநா அனுப்பியுள்ள கடிதத்தில், ”எஸ்.ஐ.ஆர்-ன் போது 5.2 கோடி வாக்களர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது, வாக்களர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டனவா? எனக் கேள்வி எழுகிறது. மேலும், இந்த செயல்முறையால் முஸ்லிம் வாக்காளர்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்க பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்ற நந்திகிராம் தொகுதியில், 25% சதவீதம் மட்டுமே முஸ்லீம்கள் இருக்கும்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில், 95 சதவீதம் முஸ்லீம்களே நீக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதேபோன்ற விவகாரங்கள் பீகாரி லும் நடந்துள்ளதால் சிறுபான்மை யினரிடையே குடியுரிமை சார்ந்த அச்சம் எழுந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தேர்தல் நடைமுறையில் இருந்து விலக்குவது, முஸ்லீம்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவத் போலாகி விடும். இது, 1992-ம் ஆண்டின் ஐநாவின் சிறுபான்மையினர் சுதந்திரப் பிரகடனத்திற்கு எதிரானது” எனத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர்-ல் நீக்கப்பட்டவர்கள் குறித்தான துல்லிய விவரம், சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டைப் போக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்த 7 முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய அரசு பதிலளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.