\
India's Youth Face Job Crisis Despite Economic Growth
இளைஞர்கள்pt web

மிகப் பெரும் நெருக்கடியில் இந்தியா.. 40% பட்டதாரிகள் வேலையின்றி தவிப்பு - ஆய்வறிக்கை

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பத் தரமான வேலைவாய்ப்புகள் உருவாகாததால், இளைஞர்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்துப் பார்க்கலாம்.
Published on

ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் முக்கியப் பொருளாதார சக்தியாக பார்க்கப்படுகிறது. ஆனால், உள்ளுக்குள் நாடு பெரும் வேலைவாய்ப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியாவில் 15 முதல் 29 வயது வரையிலான 36.7 கோடி இளைஞர்கள் உள்ள நிலையில், அவர்களின் கல்வித் தகுதிக்கு இணையான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கை கூறுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 1 கோடி பேர் பட்டம்பெறும் சூழலில், பாதி பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது என்றும் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 40 சதவீதம் பேர் வேலையின்றித் தவிக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வறிக்கை.

வேலையில்லா திண்டாட்டம்
வேலையில்லா திண்டாட்டம்PTI

வேலையில்லாமல் திணறும் இளைஞர்களில் 67 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பு தேக்கத்தை இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் போன்ற சுயாதீன அமைப்புகளின் தரவுகளும் எச்சரிக்கின்றன. இந்திய வேலைவாய்ப்புச் சந்தை இரு உலகங்களாகப் பிரிந்து கிடக்கிறது. வெறும் 10 சதவீதம் தொழிலாளர்கள் மட்டுமே அமைப்புசார் துறைகளில் பணிப் பாதுகாப்போடு இருக்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் பேர் கட்டுமானத் தொழில், டெலிவரி பாய் போன்ற தற்காலிக வேலைகளிலும், பிழைப்பிற்காக சுயதொழிலிலும் முடக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் நிரந்தர வேலைகளை விட 'ஒப்பந்த வேலைகள்' இரு மடங்கு வேகமாக அதிகரித்துள்ளன.

India's Youth Face Job Crisis Despite Economic Growth
நான் ஓடவில்லை; ஒளியவில்லை.. விசாரணைக்கு ஆஜராகதது ஏன்? - எ.வ.வேலு விளக்கம்

தவிர, இந்தியர்களின் ஊதிய வளர்ச்சியும் பெரும் தேக்கம் கண்டுள்ளது. தற்போதைய ஜிடிபி வளர்ச்சி என்பது பொதுமக்களின் வருவாயை உயர்த்தாத மூலதனச் செறிவுமிக்க ஐடி, நிதித் துறை உள்ளிட்ட சேவைத் துறைகளையே பிரதானமாக நம்பியுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏழை, நடுத்தர மக்களை உயர்த்துவதற்கு தொழில்மயமாக்கலே முக்கிய வழி எனக் கூறப்படும் நிலையில், இந்தியா உற்பத்தித் துறையில் பின்தங்கியுள்ளது. இந்தியா சேவைத் துறையில் கவனம் செலுத்திய நிலையில் சீனா உற்பத்தித் துறையில் தீவிரமாக செயல்பட்டு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2014இல் 'மேக் இன் இந்தியா' தொடங்கப்பட்டு, உற்பத்தியின் பங்கை 2022ஆம் ஆண்டுக்குள் 25% ஆக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டது.

மேக் இன் இந்தியா
மேக் இன் இந்தியாPt web

ஆனால், தற்போது இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கும் வெறும் 14 சதவீதமாகவே உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வியட்நாம், வங்கதேசம் நோக்கிச் செல்கின்றன. பொருளாதாரக் குறைபாடுகளுக்கு இணையாக, இந்திய கல்வி முறையும் சந்தைத் தேவைகளுக்குப் பொருத்தமற்று இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. தரமற்ற கல்லூரிகளிலிருந்து உருவாகும் பொறியியல் பட்டதாரிகள் வேலைக்குத் தகுதியற்றவர்களாக இருப்பதாக தொழில்துறையினர் கூறுகின்றனர். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்டிக்கும் இந்தியா, உற்பத்தியைப் பெருக்கித் தரமான வேலைகளை உருவாக்கத் தவறினால், இந்த மனிதவள சாதகம் நாட்டின் பெரும் பொருளாதாரச் சவாலாக மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

India's Youth Face Job Crisis Despite Economic Growth
’வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு.. அரசியல் கட்சியாக மாறும் - அண்ணாமலை பேசியது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com