உலக வரைபடத்தைப் பார்க்கும்போது, இந்தியாவின் நிலப்பரப்பு அதன் உண்மையான அளவைவிட சிறியதாகத் தோன்றுவதற்கு நாம் பயன்படுத்தி வரும் வரைபடத்தின் வடிவமைப்பே முக்கியக் காரணம். பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘மெர்கேட்டர் புரொஜெக்ஷன்’ (Mercator Projection) எனப்படும் வரைபடம், பூமியின் உருண்டையான வடிவத்தை ஒரு தட்டையான வரைபடமாக மாற்றுகிறது. இதன் காரணமாக, பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் அவற்றின் உண்மையான அளவைவிட சிறியதாகக் காட்சியளிக்கின்றன. அதேவேளையில், துருவப் பகுதிகளை நோக்கிச் செல்லச் செல்ல நிலப்பரப்புகள் பெரிதாகத் தோன்றுவதால், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவற்றின் உண்மையான அளவைவிட மிகப்பெரியதாகக் காட்சியளிக்கின்றன.
உதாரணமாக, வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பது போலத் தெரிந்தாலும், உண்மையில் ஆப்பிரிக்காவின் பரப்பளவு கிரீன்லாந்தைவிட சுமார் 14 மடங்கு அதிகம். இந்தச்சூழலில் தான், உலக வரைபடத்தில் மேற்குலக நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரிபு இருப்பதாக பல ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுவே, ‘கார்ட்டோகிராபிக் காலனித்துவம்’ (Cartographic colonialis) அதாவது 'வரைபட ரீதியிலான காலனித்துவம்' என அழைக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, கடந்த 2018-ம் ஆண்டு வரைபடவியலாளர்கள் நிலப்பரப்புகளின் உண்மையான அளவை மிகவும் துல்லியமாகக் காட்டும் ‘ஈக்வல் எர்த்’ (Equal Earth) வரைபடத்தை உருவாக்கினர்.
இதையடுத்து, தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மெர்கேட்டர் வரைபடத்திற்கு மாற்றாக, நாடுகளின் உண்மையான நிலப்பரப்பு அளவை துல்லியமாகக் காட்டும் ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. இதன் தொடர்ச்சியாக, ஆப்பிரிக்க நாடான டோகோ (Togo), ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பு அளவைச் சரியாகப் பிரதிபலிக்கும் ‘ஈக்வல் எர்த்’ உலக வரைபடத்தை பயன்படுத்த சர்வதேச அளவில் ஊக்குவிக்கும் தீர்மானம் ஐநா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்டது.
இதுதொடர்பான வாக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்தியா உள்ளிட்ட 164 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அதேசமயம், அமெரிக்கா மட்டும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. இதன் மூலம், பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐநா அவையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானமானது கட்டாயச் சட்டம் அல்ல என்றபோதிலும், இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனங்கள், வரைபட நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்களில் இந்த புதிய வரைபடத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்படும்.
அதேசமயம், இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்தப்பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முழு இறையாண்மைப் பகுதியும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே சித்தரிக்கப்பட வேண்டும். இதில் எந்தவொரு தவறான அல்லது குழப்பமான சித்தரிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான நிலைப்பாடு தெளிவானது, நிலையானது மற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.