Police - protester clash ANI
இந்தியா

உஜ்ஜைனில் வெடித்த பதற்றம்; கல்வீச்சு.. 2,500 போலீஸ் குவிப்பு.. காரணம் இதுதான்!!

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கத்திற்காக 100 ஆண்டுகள் பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் முயற்சியால் கடும் பதற்றம் ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், சாலை விரிவாக்கப் பணிக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் நடவடிக்கையின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவத்தைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சுமார் 2,500 போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாலை விரிவாக்கப் பணிக்காக மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெருமளவில் சம்பவ இடத்தில் திரண்டு, மசூதி இடிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது ஒரு குழுவினர் கல்வீச்சு நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 போலீஸார் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 10 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 5 பேர் சமூக வலைதளங்களில் செயல்படும் இன்ஃப்ளூயன்சர்கள் என்றும், தவறான தகவல்களைப் பரப்பி அமைதியைக் குலைத்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு இருப்பதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Ujjain

மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி, சிம்ஹஸ்தா விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கத் திட்டத்தின் பாதையில், மசூதியின் சுமார் 9 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாகம் கூறியுள்ளது.

ஷாஹி மசூதி 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என அதன் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இதனால் மசூதியை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.