டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் AI தாக்க உச்சி மாநாடு பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், உலகளவில் இருந்து 45-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டிருந்தன. இந்த சூழலில் தான், பிப்ரவரி 20-ம் தேதி மாநாட்டின் கண்காட்சி அரங்குக்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் பிரிவை சேர்ந்த சிலர் தங்கள் மேலாடைகளை அகற்றி பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த மேலாடைகளில் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு, ”சமரசம் செய்த மோடி” எனும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சம்பவம் ஏஐ மாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், உலகளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுக்க இந்த மாதிரியான செயல்களில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேரை டெல்லி காவல்துறை கைது செய்திருந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று அதிகாலை இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதில் குற்றவியல் சதித்திட்டம் 61(2), பொது ஊழியரை பணியில் இருந்து தடுக்க தானாக முன்வந்து காயம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக 121(1) ஆகியவை அடங்கும்.
தொடர்ந்து, இவர் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவல்துறை தரப்பில் இருந்து, AI உச்சி மாநாட்டியில் நுழைந்து கோஷங்களை எழுப்பியதுடன், தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினரைத் தாக்கி சூழலை சீர்குலைக்க முயன்றதாக உதய் பானு சிப் மீது குற்றம் சாட்டியது. மேலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் 4 நாட்கள் விசாரணைக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் தான், 26 முன்னாள் நீதிபதிகள், முன்னாள் தூதர்கள் உட்பட 102 ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் 149 ஓய்வுபெற்ற மூத்த ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 277 பேர் கையொப்பமிட்ட ஒரு கூட்டு அறிக்கையை, ”பாரத் மண்பத்தில் ஒரு தேசிய அவமானம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில்நுட்பத் தலைவர்கள், உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் எதிர்காலத்தின் முதன்மை சிற்பியாக இந்தியா உயர்ந்து வருவதைக் காண கூடியிருந்த நேரத்தில், இந்த மாதிரியான போராட்டம் நடத்தியது நாட்டை அவமானப்படுத்த மட்டுமே உதவியது. இளைஞர் காங்கிரஸார் இவ்வாறு, சட்டையில்லாமல் மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டது தேசிய அவமானம்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.