மணிப்பூர்
மணிப்பூர்  ஃபேஸ்புக்
இந்தியா

மணிப்பூர் வன்முறை- CRPF வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

ஜெனிட்டா ரோஸ்லின்

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உள் மணிப்பூர், அவுட்டர் மணிப்பூர் என்று இரண்டு மக்களவை தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் பதற்றமான சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு இரண்டு பழங்குடி பிரிவினருக்கிடையே இனக்கலவரம் வெடித்ததில் தொடங்கி, முதற்கட்ட வாக்குப்பதிவில் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வரை என பதற்றத்திற்கு பஞ்சமில்லாத மாநிலமாக மணிப்பூர் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில்தான், மீண்டும் ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டம் நாராயணசேனா கிராமத்தில் வசித்து வரும் குக்கி இன மக்களுக்கும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பிற்காக நரேன் சேனா பகுதியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர்களான, என் சர்க்கார்,எச்சி அருப் சைனி ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சில வீரர்கள் பலத்த காயமடைந்த நிலையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவிலேயே மணிப்பூரின் தெற்கு பகுதியில் உள்ள மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியை கைப்பற்றுவதற்காக போராளி இயக்கத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக ஏப்ரல் 22-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.மேலும் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலிலும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் பதற்றம் நிறைந்த சூழல் காணப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல கடந்த 2023-ம் ஆண்டு இனக்கலவரம் வெடித்ததில் 210 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மீண்டும் வெடித்துள்ள இந்த வன்முறை சம்பம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.