உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவா வேண்டும். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் போலீசார் அவ்வப்போது விழிப்புணர்வு தகவல்கள் அளித்து எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படியான சம்பவம் நொய்டாவில் அரங்கேறி இருக்கிறது.
டெல்லியை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் இயக்குநராக இருப்பவர், தல்ஜித் சிங். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அது விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஒரு திருமண வாழ்வைத் தேடுவதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். சாதாரண வாழ்த்துகள் மூலம் ஆரம்பித்த இவர்களது இணையப் பயணம், அடுத்தடுத்த உரையாடல்களால் காதல் வரை நீண்டுள்ளது. காதல் வந்துவிட்டால் போதும், வாழ்க்கையின் விதியைக்கூட மாற்றும் என்பதற்கு தல்ஜித் சிங்கின் கதையே தற்போது ஓர் உதாரணமாகி உள்ளது. தல்ஜித் சிங்கின் நம்பிக்கையைப் பெற்ற, அனிதா அதன்பிறகு தன்னுடைய நாடகத் திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டார். அதாவது, எதிர்கால வாழ்க்கைக்கு வர்த்தகம் மூலம் பெரும் லாபம் ஈட்டுவது குறித்த தகவல்களை தல்ஜித் சிங்கிடம் பகிர்ந்து, மூன்று நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அதில் முதலீடு செய்ய வலியுறுத்தியுள்ளார்.
காதலி சொன்னால் போதும், கண்ணை மூடிக்கொண்டு கடலுக்குள் குதிக்கும் கூட்டம்போல், தல்ஜித் சிங்கும் அனிதாவின் பேச்சை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார். அதன்பேரில் முதல் கட்டமாக ரூ.3.2 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதன்பேரில் சில மணி நேரத்திலேயே ரூ.24,000த்தையும் சம்பாதித்துள்ளார். அந்த தொகையில் ரூ.8,000-ஐ தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதைத் தொடர்ந்து அனிதா சொல்வது அனைத்தும் உண்மை என்றே நம்பினார். அவரே, தன் நலம் விரும்பி எனவும் உயிர்நாடி எனவும் நினைத்தார். இதையடுத்து, அனிதா சொல்லச்சொல்ல தல்ஜித் சிங் தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் 4.5 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளார்.
மேலும், அனிதாவின் ஆலோசனையின் பேரில், கடனாக 2 கோடி ரூபாய் பெற்று அதையும் முதலீடு செய்துள்ளார். இப்படி, அவர் 30 வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.6.5 கோடியை 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். இறுதியில், அந்தப் பணத்தை எடுக்க முயன்ற தல்ஜித்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அப்பணத்தை எடுக்க வேண்டுமானால், அதேபோல் 30 சதவீத பணத்தை மாற்றும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைச் செய்ய தல்ஜித் சிங் மறுத்ததால், அவர் பணம் முதலீடு செய்த இரண்டு நிறுவனங்கள் செயலிழந்தன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்ததத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை நடத்தியதில், அனிதாவின் டேட்டிங் செயலி சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும், பணம் மாற்றப்பட்ட கணக்குகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.