விமானத்தில் பயணிப்பவர்கள் விமானம் கிளம்புவதற்கு சற்று நேரம் முன்பு விமான நிலையத்துக்குச் சென்று அவசரகதியில் விமானத்தைப் பிடிப்பதும் அதனைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் ஒரு போக்காக உருவாகியுள்ளது.
இதை 'Airport Theory Challenge' என்று அழைக்கிறார்கள். பொதுவாக விமானப் பயணம் செய்பவர்கள் உள்நாட்டுப் பயணம் என்றால் ஒருமணி நேரம் முன்னதாகவும் வெளிநாட்டுப் பயணம் என்றால் இரண்டுமணி நேரம் முன்னதாகவும் விமான நிலையத்துக்கு சென்றுவிட வேண்டும்.
பரிசோதனை நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு சரியாக இருக்கும். இந்நிலையில் பெட்ஸி க்ரஞ்ச் என்பவர், தான் பயணிக்கவிருந்த விமானம் கிளம்புவதற்கு அரை மணிநேரம் முன்பு விமான நிலையத்துக்கு வந்து விமானத்தில் ஏறினார். இதை அவர் காணொளியாகப் பதிவு செய்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
தவிர்க்க முடியாத காரணத்தால்தான் விமான நிலையத்துக்கு தாமதமாக சென்றதாகக் கூறியுள்ளார் பெட்ஸி. ஆனால் அரைமணிநேரத்தில் அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு பரபரப்பாக விமானம் ஏறுவதை காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டு 'Airport Theory Challenge' ஐத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பலரும் 'Airport Theory Challenge' என்ற பேரில், வேண்டுமென்றே விமான நிலையத்துக்கு தாமதமாகச் சென்று அவசர கதியில் விமானம் ஏறுவதைக் காணொளி எடுத்துப் பகிர்ந்தனர்.
15-20 நிமிடங்களுக்குள் விமான நிலைய நடைமுறைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறிவிட முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இதைச் சிலர் பின்பற்றுகின்றனர். வேறு சிலர் Airport Theory Challengeஇல் பங்கேற்க முயன்றதால் தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் பதிவிட்டுவருகின்றனர். Airport Theory Challengeஐ முயன்று பார்ப்பவர்கள் விமானத்தைத் தவறவிடும் வாய்ப்புகள் மிக அதிகம், விமான பயணச்சீட்டு கட்டணத்தை இழக்க நேரிடும். மேலும் விமான நிலைய ஊழியர்களுக்கு பணி அழுத்தம் அதிகரிக்கும். எனவே 'Airport Theory Challenge' ஆபத்தான போக்கு என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.