நாடுமுழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு web
இந்தியா

நாடுமுழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு.. எப்போதிலிருந்து அமலுக்கு வருகிறது?

600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயரவிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Rishan Vengai

இந்திய ரயில்வே, 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்தவுள்ளது. சாதாரண வகுப்புகளில் 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு பைசா அதிகரிக்கப்படும். மெயில் மற்றும் விரைவு ரயில்களில் 2 பைசா உயர்வு. புறநகர் மின்சார ரயில்களில் மாற்றம் இல்லை. இந்த உயர்வு மூலம் 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் கட்டணம் வரும் 26ஆம் தேதி முதல்உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதாரண வகுப்புகளில் 215 கிலோ மீட்டர்வரை கட்டண உயர்வு இல்லை என்றும், 215 கிலோ மீட்டருக்கு மேல் கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் 10 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்

ரயில் கட்டணஉயர்வு மூலம் கூடுதலாக 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. புறநகர் மின்சார ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டண உயர்வு ஏன்?

இந்திய ரயில்வேயின் செயல்பாட்டுச்செலவுகள் நடப்பு நிதியாண்டில் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக பணியாளார்களின் ஊதியச் செலவு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடியாகவும், ஓய்வூதியச் செலவு 60ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ரயில் டிக்கெட்

இந்த கூடுதல் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும் ரயில் கட்டணங்களை ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக கடந்த ஜூலை மாதம் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பயணிக்கும் இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணங்கள், 5 முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.