Aishwarya Rai
Aishwarya Rai PT
இந்தியா

‘ஐஸ்வர்யா ராய் மாதிரி கண்கள் வேணுமா? இதை பண்ணுங்க’ பாஜக அமைச்சரின் அட்வைஸ்..!

PT digital Desk

ஒரு பக்கம் மீனை சைவத்தில் சேர்க்கலாமே என ஆலோசனை சொல்லிவருகிறார் தமிழிசை சௌந்திரராஜன். இன்னொரு பக்கம் , ஐஸ்வர்யா மாதிரி உங்கள் கண்களும் ஜொலிக்க வேண்டுமா மீன் சாப்பிடுங்கள் என மீனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் விஜயகுமார் கவித்.

வடக்கு மகாராஷ்டிராவின் நண்டுர்பார் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 68 வயதான பாஜக அமைச்சர் விஜயகுமார் கவித், ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியது வைரலாகியிருக்கிறது.

அவர், “தினமும் மீன் சாப்பிடுபவர்களின் சருமம் பள பளவென மின்னும். அவர்களின் கண்களும் மின்னத் தொடங்கும். நீங்கள் தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் உங்களை யாராவது பார்த்தால், அவர்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். மீனிலிருக்கும் எண்ணெய் உங்கள் சருமத்தை பள பளவென மாற்றும். உங்களிடம் ஐஸ்வர்யா ராய் பற்றி சொல்லியிருக்கிறேனா? அவர் மங்களூருக்கு அருகில் தான் வசித்துவந்தார். அவர் தினமும் மீன் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஐஸ்வர்யா ராயின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் போன்றே உங்கள் கண்களும் மின்னவேண்டும் என்றால் தினமும் மீன் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்” என்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமோல் மித்கரி என்பவர், “பழங்குடியின அமைச்சரான விஜயகுமார், அந்த மக்களுக்காகன முன்னேற்றம் குறித்து எதுவும் பேசாமல் இப்படி சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுவதை தவிர்க்கலாம்” என விமர்சித்திருக்கிறார்.

இன்னொருபக்கம் சொந்தகட்சியான பாஜக-வின் எம்.எல்.ஏ நிதேஷ் ரானா, "நான் தினமும் மீன் உட்கொள்ளும் பழக்கமுடையவன் தான். என்னுடைய கண்கள் இந்நேரத்திற்கு ஐஸ்வர்யா ராய் போல் மாறியிருக்க வேண்டும். இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என விஜய்குமார் கவித்திடம் கேட்க வேண்டும்" என்கிறார்.

இதற்கிடையே மூன்று நாட்களுக்குள் இதுகுறித்து விளக்கத்தை மாநில பெண்கள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருக்கிறார் மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவரான ரூபாலி சகங்கர். ‘மக்களின் பிரதிநிதிகள் பெண்கள் குறித்த இப்படியான விஷயங்களை பேசும்போது அதீத கவனத்துடன் இருக்க வேண்டும்’ எனவும் ஆலோசனை வழங்கியிருக்கிறார் அவர்.

நீங்கள் மீன் சாப்பிடுபவரா... உங்கள் கண்கள் ஐஸ்வர்யா ராய் போல் மின்னுவதாக யாரேனும் சொல்லியிருக்கிறார்களா? கமென்ட்டில் சொல்லுங்களேன்.!