நிர்மலா சீதாராமன் முகநூல்
இந்தியா

’தமிழை காட்டுமிராண்டி... மாலை போட்டு வைத்துள்ளீர்கள் ’ - நிர்மலா சீதாராமன்!

நிதியமைச்சரின் பேச்சால் திமுக, அதன் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு.

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு ஆளும் கூட்டணி எதிர்க்கட்சிகளை அவமரியாதை செய்வதாக கடும்கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் அமைப்பின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசை விமர்சித்ததாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டினார்.

மாநிலங்களவையில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையான நிலையில் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பேசுபொருளானது. குறைவான கடன் விகிதத்தில் மத்திய அரசை விட தமிழக அரசு சிறந்து விளங்குவதாக திமுக எம்பி அருண் நேரு பேசியிருந்த நிலையில் அதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

மத்திய அரசிற்கு பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் உள்ளதாகவும் எனவே மாநில அரசின் கடன்சுமை விகிதங்களுடன் மத்திய அரசின் கடன் விகிதங்களை ஒப்பிடுவது சரியல்ல என விளக்கினார். மேலும் தமிழ்நாட்டில் கல்வித்துறையில் மாணவர்கள் கற்றல் திறன் குறைவாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

மேலும், திமுக எம்பிக்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள். ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதன் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய புள்ளிவிவரங்கள் அரசு வெளியிட்டவை அல்ல என்றும் தனியார் ஆய்வில் கூறப்பட்டவை என்றும் விளக்கினார்.

மேலும், தமிழக அரசை குறைகூறும் வகையிலேயே நிதியமைச்சரின் பெரும்பகுதி உரை அமைந்திருந்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார். முன்னதாக மத்திய பட்ஜெட் தொடர்பான கூடுதல் செலவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது