திரிணாமுல் எம்.பி-கள் கைது Pt web
இந்தியா

ED சோதனை | டெல்லியில் மம்தா கட்சி எம்.பிக்கள் போராட்டம்.. கைது செய்த போலீஸார்!

மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 8 எம்பிக்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது.

PT WEB

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசனை நிறுவனமாகச் செயல்பட்டு வரும் ஐ பேக்கின் கொல்கத்தா அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மேலும், ஐ-பேக் அமைப்பின் இணை நிறுவனரும் இயக்குநருமான பிரடிக் ஜெயின் இல்லத்திலும் இச்சோதனை நடைபெற்றது. பிரடிக் ஜெயின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.

மம்தா பானர்ஜி

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சோதனை நடைபெறும் ஐ பேக் நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகத்திற்கு நேரில் சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ”அமலாக்கத்துறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆவணங்கள், செயல் திட்டங்கள், வியூகங்கள் மற்றும் தரவுகளை அமலாக்கத்துறை மூலம் கைப்பற்ற அமித் ஷா முனைந்துள்ளதாகவும், இதுபோன்ற உள்துறை அமைச்சர் நாட்டை எப்படிக் காப்பாற்றுவார் என எதிர்பார்க்க முடியும்” எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, நிலக்கரி ஊழல் மற்றும் சட்டவிரோதமாக நிலக்கரி கடத்தியது உள்ளிட்ட வழக்குகளில், ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடக்கிறது. உள்நோக்கத்துடன் எந்தக் கட்சியையும் குறித்து இந்தச் சோதனை நடத்தப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டி, டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகம் முன்பாக மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள பகுதியில், தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறும் காவல்துறையினர் பலமுறை அறிவுறுத்தியும் எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி-க்களை அதிரடியாக கைது செய்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் போராட்டம்

அப்போது, பெண் காவல்துறையினர் மஹுவா மொய்த்ராவின் கை மற்றும் கால்களைப் பிடித்து குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். மூத்த எம்பியான டெரெக் ஓ பிரையன் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன நேர்கிறது என்பதைப் பாருங்கள்" என்று ஆவேசமாகக் கூச்சலிட்டார். சதாப்தி ராய், சாகேத் கோகலே, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட பிற எம்பிக்களும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "உள்துறை அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது. பாதுகாப்புச் சட்டங்களின்படி எம்பிக்களைக் கலைந்து செல்லக் கோரினோம். அவர்கள் ஒத்துழைக்க மறுத்ததால், வேறு வழியின்றித் தற்காலிகமாகத் தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

இந்தக் கைது நடவடிக்கைக்குத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "ஜனநாயகத்தை நசுக்க அமித் ஷா தனது காவல்துறையை ஏவுகிறார். அமைதியான முறையில் போராடிய எம்பிக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளது.

மம்தா பானர்ஜி பேரணி.!

ஐ பேக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனையை கண்டித்தும், மத்தியப் புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது எனவும் கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.