மேற்கு வங்கத்தில் (West Bengal) திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) இரண்டாக உடைந்துள்ள நிலையில், மம்தாவின் நம்பிக்கை முகமாகப் பார்க்கப்படும் அக்கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா (Mahua Moitra), மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியை (Suvendu Adhikari) திடீரென பாராட்டி இருப்பது மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா (Ritabrata Banerjee), தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். அதேபோல், 20 மக்களவை எம்பிக்கள் பெயர் தெரியாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் (NCPI) இணைந்தது மம்தாவுக்கு மேலும் பின்னடைவைத் தந்தது. இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாகக் கருதப்படும் எம்பியான மஹுவா மொய்த்ரா, பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரியை அவர் திடீரென பாராட்டியிருப்பது பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
பிபிசிக்கு அளித்த பேட்டியொன்றில், “தங்களின் அரசியல் பாதைகள் வேறுபட்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில், சுவேந்து அதிகாரியுடன் எனக்கு மிகவும் நல்ல நட்பு இருந்துள்ளது. நாங்கள் இருவரும் திரிணாமுல் காங்கிரஸில் ஒன்றாக இருந்தபோது, அவர் எனக்கு மிகவும் ஆதரவளித்தார்.
குறிப்பாக, 2014-இல் எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அது கிடைக்கவில்லை. நான் இரவு முழுவதும் அழுதேன். அப்போது, சுவேந்து எனக்கு ஆறுதல் கூறினார். அதேபோல், நான் முதன்முதலில் கரீம்பூரில் போட்டியிட்டபோது, எனக்காகப் பிரசாரம் செய்ய யாரும் வரவில்லை. ஆனால் எனது முதல் பேரணியை சுவேந்து அதிகாரிதான் நடத்தினார். எனினும், சுவேந்து இன்று வேறு கட்சிக்குச் சென்றுவிட்டார். அதனால், நாங்கள் இப்போது பேசிக்கொள்வதில்லை. ஆனால், அவர் எனக்குச் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா, கட்சி தாவும் எண்ணத்தில் இல்லை என்றாலும், அவரது கருத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. அதேநேரத்தில், அவரது நடவடிக்கைகளும் திரிணாமுல் காங்கிரஸால் உற்றுநோக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.