இந்தியா

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு

JustinDurai
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து 2 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் மொத்தமுள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4வது மதகுகள் 35 சென்டிமீட்டர் உயர்த்தப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 534 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வெளியேற்றப்படும் இந்த தண்ணீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு சென்றடையும். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டும்போது 13 மதகுகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்படும். தற்போதைக்கு அணையில் 139.50 அடி வரை நீர்தேக்க கேரளா கோரிய நிலையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சீபா ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில் 2014, 2015, 2018ல் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.