ரூ. 500 கோடி ஆடியோ விவகாரம் பாஜக - சிவசேனா இடையே புதிய மோதலை உருவாக்கியுள்ளது. மராத்தா இடஒதுக்கீட்டுத் தலைவர் வெளியிட்ட ஆடியோவில் ஷிண்டே தரப்பின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக, ஆடியோ உண்மையா அல்லது பொய்யா என கேள்வி எழுப்ப, சிவசேனா தலைவர்கள் ஷிண்டேவின் அரசியல் எதிர்ப்புகளை சதி என குற்றம்சாட்டினர்.
மராத்தா இடஒதுக்கீட்டுத் தலைவர் மனோஜ் ஜராங்கே-பாட்டீல் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோவில், 2024 சட்டமன்றத் தேர்தலின்போது, ஏக்நாத் ஷிண்டேயின் மகன் மூலம் தனக்கு 500 கோடி ரூபாய் கைமாறியதாக அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது. ஆனால் ஷிண்டே தரப்பு இதை மறுத்துள்ளது. பாஜகவோ, இந்த ஆடியோ உண்மையானதா அல்லது யாராவது பொய்யாக உருவாக்கியதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஷிண்டேவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், பாஜகவுக்குள்ளேயே சிலர் அவரை அரசியலில் காலி செய்ய சதி செய்வதாக சிவசேனா தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேச சிவசேனா தலைவர்கள் முதல்வரை சந்திக்கச் சென்றபோது, ஏக்நாத் ஷிண்டே அதில் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே 2029 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவின் பலத்தை அதிகரித்து, ஏக்நாத் ஷிண்டேவை மீண்டும் முதல்வராக்குவதே இலக்கு என்று சிவசேனா தலைவர்கள் பொதுவெளியில் பேசி வருகின்றனர். இது பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான எதிர்கால அதிகாரப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.