பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இருக்கும் நிலையில், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜே.டி தலைவரும், மகா கட்பந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் "நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அனைவருக்கும் நன்றி. ஒரு மாற்றம் வரப்போகிறது. நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம்" எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தேஜஸ்வி யாதவ் போட்டியிட்ட ராகோபூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்தது.
தொடர்ந்து, 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 154 இடங்களிலும், மகா கட்பந்தன் கூட்டணி 80 இடங்களிலும், ஜன் சுராஜ் கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிகார் தேர்தலில் வெற்றி பெற பெரும்பாண்மைக்கு 122 இடங்கள் போதுமான நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பாண்மைக்கு தேவையான இடங்களை கடந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
குறிப்பாக, பாஜக போட்டியிட்ட 101 இடங்களில் அதிகபட்சமாக 80 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 53 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 10 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.