மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தை கட்டாயமாக பாட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பில் அரசு நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தே மாதரம் பாடலைத்தான் பாட வேண்டும் என்றும், அதன் பிறகே தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
அதே போல வந்தே மாதரம் பாடலின் அதிகாரப்பூர்வ முழுப் பதிப்பான 6 பத்திகளையும் முழுமையாகப் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் வந்தே மாதரத்தின் இறுதி பத்திகளில் இந்து கடவுள்கள் குறித்த பாடல்கள் இருந்ததால் இதற்கும் எதிர்ப்பு எழுந்தது.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றபோதும், அமைச்சர்கள் பதவியேற்றபோதும் முதலில் வந்தே மாதரம் பாடலின் முழு பத்திகளும் பாடப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முதல்வர் விஜயும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இது குறித்து வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இன்று சட்டமன்றம் கூடியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் கலந்துகொள்வார் என்பதால் மத்திய அரசின் புதிய உத்தரவின்படி வந்தே மாதரம் பாடலை முதலிலிருந்து இறுதி வரை முழுமையாகப் பாட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தது.
ஆனால் ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கேரள காவல்துறை இசைக்குழு (Police Band) வந்தே மாதரம் பாடலை முழுமையாக வாசிக்காமல், அதன் ஆரம்பப் பத்திகளை மட்டும் வாசித்துவிட்டு பாதியிலேயே நிறுத்தியது. சட்டப்பேரவை நிகழ்வு முடிந்தபின்னர் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் வி. முரளீதரன், மத்திய அரசின் நேரடி உத்தரவு இருந்தும், ஜமாஅத்-இ-இஸ்லாமி மற்றும் கம்யூனிஸ்டுகளின் அழுத்தத்திற்குப் பணிந்து புதிய காங்கிரஸ் அரசு தேசியப் பாடலை அவமதித்துவிட்டது என்று குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்த கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் (V.D. Satheesan) வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே மதச்சார்பற்றவை, அதன் பிறகு வரும் வரிகள் குறிப்பிட்ட மதச்சார்புடையதாக மாறுவதால், நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்க முதல் இரு பத்திகளை மட்டும் ஒலிக்கச் செய்யுமாறு காவல்துறைக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.