delhi fire accident  X
இந்தியா

உறையவைத்த டெல்லி தீ விபத்து.. 8 உயிர்களை காப்பாற்றிய ஹீரோ.. 2 லட்சத்தை இழந்த சோகம்!

டெல்லி தீ விபத்தில் கடை உரிமையாளர் ஒருவர் மெத்தைகளை பயன்படுத்தி 8 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

Praveen Joshva L

டெல்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான மாளவியா நகர் பகுதியில் அமைந்திருந்த ஒரு ஹோட்டலின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீ ஹோட்டலின் பிற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், இதில் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் கடுமையாக முயற்சித்த நிலையில், இறுதியில் தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்து மற்றும் புகை காரணமாக மூச்சுத்திணறி 21 பேர் உயிரிழந்தது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த தீ விபத்தில் இருந்து ஒரு நபர் ஹீரோவாக செயல்பட்டு பலரின் உயிரை காத்த சம்பவம் வெளியாகியுள்ளது. தீ விபத்து நடந்த ஹோட்டலின் அருகே ரியாசுதீன் மன்சூரி என்பவர் மெத்தை கடை ஒன்றை நடத்தி வருகிறார். தீ விபத்தால் ஹோட்டலில் மேல் தளத்தில் சிக்கிய பலர் ஜன்னல் வழியே வெளியே குதிக்க முயற்சித்துள்ளனர்.

இதனை கண்ட மன்சூரியும் அவரின் மகன் அர்மானும் உடனடியாக செயல்பட்டு தங்கள் கடையில் இருந்த 20க்கும் மேற்பட்ட மெத்தைகளை தரையில் விரித்து தீ விபத்தில் இருந்து தப்பிக்க கீழே குதித்த சுமார் 8 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர். அதோடு மீட்பு பணியில் இருந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களின் சடலத்தையும் பத்திரமாக வெளியே கொண்டுவரவும் தங்களிடமிருந்த மெத்தை, போர்வைகளை அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் தங்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே தலைமறைவாக இருந்த ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 6 அறைகள் இயக்க மட்டுமே அனுமதி இருந்த நிலையில், விதிமீறி 25 அறைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.