பிகார் சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் வேலை வாய்ப்பு, விவசாய உதவித்தொகை, மெட்ரோ ரயில் சேவை, இலவச கல்வி, திறன் பயிற்சி மையங்கள், தொழில் பூங்காக்கள், பெண்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடந்து முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது.
இந்நிலையில், அங்கு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகா கட்பந்தன் கூட்டணி, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதீன் ஓவைசியின் கட்சி என அங்குப் பலமுனை போட்டி நிலவுகிறது. பிகாரில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தலைவர்களின் தேர்தல் பரப்புரை, தேர்தல் வாக்குறுதிகள் என பிகார் அரசியல் களமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்கள் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிகார் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஜனநாயகக் கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
பிகாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பாட்னாவைத் தவிர மேலும், நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும்.
கே.ஜி முதல் முதுகலை வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.
பிகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
பிகாரில் 10 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
பெண்கள் தொழில் தொடங்க ரூ. 2,00,000 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
உயர்கல்வியில் பயிலும் பட்டியல் இன மாணவர்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும்.
50 லட்சம் பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
பிகாரின் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்.
பிகாரில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
போன்ற வாக்குறுதிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக, அக்டோபர் 28 ஆம் தேதி மகா கட்பந்தன் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும், வக்ப் திருத்த சட்டம் ரத்து செய்யப்படும் மற்றும் கள்ளு கடைகள் திறக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.