தாக்கரே சகோதரர்கள் pt web
இந்தியா

மும்பை: தாக்கரேக்களின் கனவு பலிக்குமா? சிவசேனையின் கோட்டை என்னவாகும்?

இந்தியாவின் பெரிய உள்ளாட்சியான மும்பையை கைப்பற்றுவதற்காக, தாக்கரே சகோதரர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கைகோத்துள்ளனர். இதன் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்..

PT WEB

இந்தியாவின் பெரிய உள்ளாட்சியான மும்பையை கைப்பற்றுவதற்காக, தாக்கரே சகோதரர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கைகோத்துள்ளனர். இதன் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்..

தாக்கரே சகோதரர்கள்

மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த இவர்கள், மீண்டும் இணைந்திருப்பது, மும்பை மாநகராட்சித் தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது. மும்பையில் மராத்தி மக்களின் அதிகாரம் பறிபோகாமல் இருக்கவும், வாக்குகள் சிதறாமல் இருக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜகவின் அரசியல் நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே, மும்பையை காக்க தங்கள் குடும்பம் எப்போதும் முன் நிற்கும் என்றார். மேலும், மும்பையின் அடுத்த மேயர் தங்களது கூட்டணியில் இருந்துதான் வருவார் என்றும், இந்துத்துவா பற்றி யாரும் தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை எனவும் எச்சரித்தார். மும்பையை பிரிப்பதற்கான சதியை, இக்கூட்டணி முறியடிக்கும் எனவும் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனிடையே, கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், ஆனால் அதனை ரகசியமாக வைத்துள்ளதாகவும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை கடத்தும் கும்பலைப்போல, தங்கள் வேட்பாளர்களை மற்ற கட்சிகள் கடத்திவிடுவார்கள் என்பதால், வேட்பாளர்களை அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா, அருணச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, மும்பையில் அவர்களுக்கு எதிராக தாக்கரே சகோதரர்கள் இணைந்துள்ளது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டணியில் இணையாமல், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.