Bama’s Letter | வாழ்க்கை உங்களுக்கு பிரச்னைகளை தரும்போது என்ன செய்வீர்கள்?
அன்யாசியோ....
கொரியன் மொழியில் அன்பான வணக்கம். 2025 முடியப்போகிறது. அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம், அதிகம் கேட்கப்பட்ட பாடல், அதிகம் படிக்கப்பட்ட கட்டுரை என உங்கள் News Feed முழுதும் 'தகவல்கள்' நிறைந்திருக்கும். நான் சொல்லப்போவது அதைப்பற்றியல்ல.
'When life gives you Tangerines' இதுதான் இந்த வருடத்தின் TMW. அதாவது Top & Most Watched. கொரியன் தொடர்களை விரும்பிப் பார்ப்பவர்கள் இதை நிச்சயம் தவறவிட்டிருக்க மாட்டார்கள். Repeat modeல் கூட பார்த்திருக்கலாம். ஏனெனில், நானும் அப்படித்தான் பார்த்தேன். உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.
அழவே மாட்டேன் என அடம்பிடிப்பவர்கள் கூட இந்தத் தொடரைப் பார்த்து நிச்சயம் கலங்கியிருப்பார்கள். அப்படி, மனதை இளக வைக்கும் காட்சிகள் நிறைந்த தொடர். தொடரின் பெயரை அப்படியே படிக்க வேண்டுமென்றால், 'வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சைகளை தரும்போது' என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லை. வாழ்க்கை நமக்கு என்ன தருகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஏ சன் மற்றும் குவான் சிக்.. இத்தம்பதியின் குழந்தைகள்.. இவர்களுடனான நெடும்பயணம்தான் When life gives you Tangerines.
ஆபத்தான முறையில் கடலில் மூழ்கி சங்கெடுத்து வரும் தாயின் மகள் ஏ சன். கவிஞராக வேண்டுமென ஆசைப்படும், நன்கு படிக்கக்கூடிய பெண். கணவர் இறந்துவிட்டநிலையில், மறுமணம் செய்து வாழ்ந்து வரும் அந்த தாய், வறிய நிலைமையால், தனது மறைந்த கணவரின் வீட்டில் மகளை விட்டு வளர்க்கிறாள். ஆனால், அங்கோ அவளைப் படிக்க விடாமல் வேலை செய்யவைக்கிறார்கள். ஏ சன் மீது அன்பு கொண்ட குவான் சிக் தனது தந்தை பிடித்துவரும் மீன்களைக் கொடுத்து அவளை பார்த்துக்கொள்கிறான். ஆனால், அவனைக் கண்டு ஏ சன் கோபப்படுகிறாள்.
ஏ சனின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தன் வாழ்வில் சந்திக்கும் வலி மற்றும் துயரத்தைக் கண்டு கலங்குவதிலும், மகள் கவிதை எழுதுவதை கண்டு மனதிற்குள் மகிழ்வதிலும் நம்மை நெகிழ வைக்கிறார்.
ஏ சன், வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திக்கும் அழகான தருணங்கள் மற்றும் துயரங்கள் நிறைந்த போராட்டங்களை காட்சிப்படுத்திய விதம் அழகு.
சிறுவயதில் இருந்தே ஏ சனை சுற்றி சுற்றி வந்து அவளையே உலகமாகக் கருதி, அவள் முகம் பார்த்தே வாழ்ந்து, அவளுக்காகவே மீன்பிடிக்கச் செல்லும் அப்பாவி இளைஞன் குவான் சிக். இனி வீட்டில் இருக்க முடியாது என்ற சூழலில் ஏ சனும், குவான் சிக்கும் ஊரை விட்டு ஓடி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் இருக்கும் நகைகளை திருடும் ஹோட்டல் உரிமையாளர் தம்பதி முதல் அங்கு நடக்கும் சம்பவங்கள் வரை எல்லாம் சுவாரஸ்யமானவை.
ஏ சன் - குவான் சிக் ஜோடி பள்ளிப்பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரையிலான அவர்களின் பயணத்தில் நாமும் இணைந்துகொள்கிறோம். 2 மகன்கள், ஒரு மகளைக் கொண்ட இந்த குடும்பத்தின் வாழ்க்கை கரடு முரடனாது என்றாலும் அன்பால் பிணைக்கப்பட்டது. அப்பயணம் 1960களில் ஜெஜூ தீவில் ஏ சனின் தாயில் ஆரம்பித்து ஏ சனில் தொடர்ந்து, அவரது மகளின் வாழ்க்கை என சோல் நகரம் வரை நீடிக்கிறது.
ஏ சனின் மகள் கதாபாத்திரமான Geum-myeong ஆக பாக் யூ பின் நடித்திருப்பார். தாய், மகள், பேத்தி என்ற வலிமையான பெண் கதாபாத்திரங்களின் போராட்டங்கள் மூலம் மூன்று தலைமுறையின் பயணத்தை இந்த தொடர் பதிவு செய்திருக்கிறது.
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதில் ஒரு தனிப்பட்ட உணர்வு இருக்கிறது. அப்படி குவான் சிக்கால் காதலிக்கப்படுகிறாள் ஏ சன். இப்படி ஒரு காதலன், இப்படியொரு கணவன் அமைய வேண்டும் என்று எண்ண வைக்கும் அளவுக்கான கதாபாத்திரம். கொரியன் தொடர்களில் இப்படியான கதாபாத்திரங்கள் உண்டு என்பதால் அவற்றோடு ஒன்றாக நாம் இதை கருதிவிட முடியாது. இந்த கதாபாத்திரத்தில் இளம் வயது குவான்சிக்காக பாக் போ கம் நடித்திருக்கிறார். முதிய பருவத்தினராக பாக் ஹேஜூன் நடித்திருக்கிறார். இருவருமே பெரிய ஃபேன் பேஸ் உள்ள நட்சத்திரங்கள்தான். இளம் பருவ குவான் சிக் தனது காதலால் கவருகிறார் எனில் முதிய பருவ குவான் சிக், தனது மகள் மீதான அளவற்ற அன்பால் அவள் காதலிப்பவனை கடுப்போடு பார்க்கும் தருணங்களில் அப்படியே நிஜத்தை பிரதிபலிக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு சாதாரண மீனவரான தந்தை, தனது மகளை ஒவ்வொரு பருவத்திலும் வளர்த்து, அவளின் வளர்ச்சியை, முதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னும் தன்னை நோக்கி கையசைக்கும் குட்டி இளவரசியாகவே நினைப்பது ஒவ்வொரு தந்தைக்கும் மனதை தொடும் காட்சிகள்.
மகளை திருமணம் செய்து தரும் வேளையில் குவான் சிக் கண் கலங்கும் காட்சிகளில் பாக் ஹே ஜூன் வாழ்ந்திருக்கிறார். பள்ளியில் விடும்போதும், கல்லூரியில் சேர்க்கும்போதும் மகள் வளர்ந்து காதலித்தவனை கைப்பிடிக்கும் போதும், "உனக்கு எதாவது பிரச்னைனா, அப்பா கிட்ட ஓடி வந்துடுன்னு" சொல்லும்போது, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது தந்தையே நினைவுக்கு வருவார். அப்படியொரு காட்சி அது.
இப்பயணத்தில் நம்மை அறியாமலேயே நமது கண்கள் கலங்கும் இடங்கள் அதிகமிருக்கின்றன. காதல், ஏக்கம், இழப்பு, தன்னிரக்கம், வாழ்க்கை போராட்டம் என ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் சந்திக்கும் விஷயங்களை இந்தத் தொடரிலும் பார்க்கலாம்.
தான் எத்தனை கஷ்டப்பட்டாலும், மகளை நல்ல நிலையில் பார்க்க ஆசைப்படும் அம்மா, அவளது வாழ்க்கைகாக எடுக்கும் முடிவுகளும், தியாகங்களும் அழகாக இந்தத் தொடரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஏ சன் திடீரென மணம் செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இளம் வயதில் கருத்தரிக்கிறாள். இளம் வயதில் மகனையும் இழக்கிறாள்; அவளது மகள் சந்திக்கும் காதல் தோல்வி, அவளது வாழ்க்கை என ரோலர் கோஸ்ட்ர்தான் இந்த தொடர் முழுவதும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜெஜூ தீவில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல் அது ஒரு சுற்றுலாத்தலமாக உருமாறுவது வரை அழகாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொடரில் கடல் சார்ந்து மீன்பிடி தொழிலை செய்யும் பெண்கள் கூட நம்மை அன்பாலும், நட்பாலும் பிணைத்துவிடுகிறர்கள்.
தொடரை பார்த்து முடித்ததும் நமக்குள் எழும் உணர்வுகளின் கலவைதான் இதன் வெற்றி. ஏ-சன் கதாபாத்திரம் மிக வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. க்வான்-சிக் ஆக நடித்திருக்கும் பார்க் போ-கம் இழப்பு, ஏக்கம் மற்றும் பொருளாதார தன்னிறைவு இல்லாத வாழ்க்கையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
Kim Won-seok, ,இயக்கத்தில் லிம் சாங்-சூனின் திரைக்கதையில் 16 எபிசோட்கள் கொண்டது இந்த சீரிஸ். ஐ யூ மற்றும் பாக் சிறுவயது ஏசன் - குவான் சிக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். Moon So-Ri மற்றும் Park Hae-Joon வயதான ஏசன் - குவான் சிக் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்தத் தொடரில் குவான் சிக்கின் காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார் ஏசன். ஆனால், குவான் சிக் கப்பல் ஏறி போகும் அந்த நேரத்தைப் பார்த்து ஓடிப்போவதும், ஏ சனை கரையில பார்த்துட்டு கப்பலில் இருந்து குதித்து குவான் சிக் கடலில் நீந்தி வந்து அவளை அடைவதும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ஒன்று. அதேபோல கடைசியாக தன் கவிதை புத்தகத்தை ஏசன் கையில் வாங்கும் அந்தத் தருணம் என்னை பாதித்தது.
நெட்பிளிக்ஸில் இந்தத் தொடரைப் பார்க்கலாம். 2025ஆம் ஆண்டில் சிறந்த சீரிசாக When life Gives you tangeneris ஐ தேர்வு செய்திருக்கிறது டைம் இதழ். நீங்களும் பாருங்கள். கட்டாயம் பிடிக்கும்.
உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்....
