தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் file image
இந்தியா

"உச்சநீதிமன்றம் கூறிய கருத்தைதான் நான் பலமுறை வலியுறுத்தி வந்தேன்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

webteam

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாகாலாந்து உதய தினம் நிகழ்ச்சி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரியில் வசிக்கும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று அந்த மாநிலத்தின் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். அப்போது நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மாணவிகளுடன் தமிழிசை சௌந்தரராஜனும் சேர்ந்து நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார் இதனைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர்...

supreme court

ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும் என்று நான் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். அப்போதுதான் பல தீர்வுகள் கிடைக்கும்; இதை பலமுறை நான் கூறியும் வருகின்றேன். தற்போது உச்சநீதிமன்றம் அந்தக் கருத்தை பதிவு செய்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆளுநருக்கும் முதல்வருக்குமான நட்பு, பலமாக இருந்தால் அது மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு செல்ல முடியும். தமிழ்நாட்டை குறிப்பிட்டுதான் இந்தக் கருத்தை கூறினேன்.

ஆனால், திமுகவை சார்ந்த அமைச்சர்கள் என்னை கடிந்து கொண்டார்கள். சில பேர் சமூக வலைதளங்களில் கூட பதிவு செய்தார்கள். இது என்ன குடும்பமா உட்கார்ந்து பேசுவதற்கு என்று.. ஆக இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாக எது நடந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். சண்டைபோட்டுக் கொண்டே நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் இணக்கமாக இருக்க வேண்டும்" என்றார்.

cm stalin governor ravi

தொடர்ந்து, “ அரசு நிகழ்ச்சிகளில் நான் தான் விருந்தினராக செல்கின்றேன். அந்த நிகழ்ச்சியில் அப்பகுதி எம்.எல்.ஏவை அழைக்கவில்லை என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்? அதிகாரிகளைதான் கேட்க வேண்டும், எனினும் அரசு நிகழ்ச்சி என்றால் அழைத்தாலும் அழைக்கவில்லை என்றாலும் மக்கள் நலனுக்காக பங்கெடுக்க வேண்டும். இதை திரித்து அரசியலாக்க வேண்டாம். எந்த சட்டமன்ற உறுப்பினரும் வேற்றுமை பார்க்க வேண்டாம். நான் எல்லோருக்கும் பொதுவானவர். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு என்னை கேட்காமல் அழைப்பிதழ் அடிக்கக்கூடாது என்ற உத்தரவை நான் போடவில்லை. அது அரசு செயலரின் சுற்றறிக்கை என்றார்.

"வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பிறகு அறிவிப்பேன். தற்போது ஆளுநராக இருப்பதால் அது குறித்து பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்ஸ்" என முற்றுப்புள்ளி வைத்தார்.