தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கல்வகுந்த்லா கவிதா, பாரத ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக அவரை, உடனடியாக நீக்க கே.சி.ஆர் முடிவு செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை விவகாரங்களுக்கான பி.ஆர்.எஸ் பொதுச் செயலாளர் சோம பாரத் குமார் மற்றும் பொதுச் செயலாளர் (அமைப்பு) டி. ரவீந்தர் ராவ் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், அந்தக் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கட்சி எம்.எல்.சி கே.கவிதாவின் சமீபத்திய நடத்தை மற்றும் தொடர்ச்சியான கட்சி விரோத நடவடிக்கைகள் பி.ஆர்.எஸ் கட்சிக்கு சேதம் விளைவிப்பதால், கட்சித் தலைமை இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கே.கவிதாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்” என அதில் பதிவிடப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கே.கவிதாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்பி.ஆர்.எஸ்.
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சி, கடந்த பிஆர்எஸ் ஆட்சியின்போது நடந்த முறைகேட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவ்வப்போது பேசிவருகிறது. அந்த வகையில், பி.ஆர்.எஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட காலேஸ்வரம் லிஃப்ட் பாசனத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதா, பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக பேசிய கவிதா, “கே.சி.ஆருக்கு ஊழல் கறை ஏன் வந்தது என்பதை நாம் (பி.ஆர்.எஸ்.) சிந்திக்க வேண்டும். கே.சி.ஆருக்கு நெருக்கமான சிலர், அவரது பெயரைப் பயன்படுத்தி பல வழிகளில் பயனடைந்துள்ளனர். அவர்களின் தவறான செயல்களால் இன்று கே.சி.ஆரின் பெயர் அவதூறாகப் பேசப்படுகிறது. அதே நபர்களை ஊக்குவித்தால் கட்சி எப்படி முன்னேற முடியும்? ஐந்து ஆண்டுகள் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், இதில் முக்கியப் பங்கு வகிக்கவில்லையா? அதனால்தான், இரண்டாவது முறையாக அதிகாரத்தில் இருந்தபோது கே.சி.ஆர் அவரை (ஹரிஷ் ராவ்) ஓரங்கட்டினார்.
காலேஸ்வரம் முழுத் திட்டத்திலும் கே.சி.ஆர் மீதான களங்கத்திற்கு இரண்டு, மூன்று நபர்கள்தான் காரணம். அதில் ஒருவர் ஹரிஷ் ராவ். மற்றொருவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சந்தோஷ் குமார். மக்களுக்கு உதவுவதில் கே.சி.ஆர் கவனம் செலுத்திய நிலையில், ஒப்பந்ததாரர்களுடன் ரகசிய பரிவர்த்தனைகள் மூலம் இவர்கள் தங்கள் செல்வத்தை பெருக்க முயன்றனர். இதில், ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் எனக்கு எதிராக நடத்திய சதித்திட்டங்களை நான் பொறுத்துக்கொண்டேன். நிச்சயமாக, இன்று நான் சொல்கிறேன். ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ராவ் பின்னால் ரேவந்த் ரெட்டி இருக்கிறார். அவர் (ரேவந்த் ரெட்டி) அவர்கள் இருவரையும் பாதுகாப்பார். ஆனால், ரேவந்த் ரெட்டி கே.சி.ஆரை குறிவைப்பார்” என மூத்த தலைவர்கள் மீது கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார். இது, பி.ஆர்.எஸ். கட்சியில் புகைச்சலைக் கிளப்பியது.
காலேஸ்வரம் முழுத் திட்டத்திலும் கே.சி.ஆர் மீதான களங்கத்திற்கு இரண்டு, மூன்று நபர்கள்தான் காரணம். அதில் ஒருவர் ஹரிஷ் ராவ். மற்றொருவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சந்தோஷ் குமார்.கே.கவிதா
அவர் கடந்த பல மாதங்களாகவே, 'தெலங்கானா ஜக்ருதி' என்ற அமைப்பின்கீழ் அரசியல் நடவடிக்கைகளைப் பெயரிடாமல் அல்லது ஒழுங்கமைக்காமல் சில கட்சித் தலைவர்களுக்கு எதிராக விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னதாக, கவிதா வெளிநாட்டில் இருந்தபோது தெலங்கானா போகு கானி கர்மிகா சங்கத்தின் (TBGKS) கௌரவத் தலைவர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். கவிதாவுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் கொப்புல ஈஸ்வர் TBGKS சங்கத்தின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சிக்குள் இருப்பவர்கள் தனக்கு எதிராகச் சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். தவிர, பி.ஆர்.எஸ்ஸின் வெள்ளி விழா கூட்டத்திற்குப் பிறகு தனது தந்தைக்கும் கட்சித் தலைவருக்கும் எழுதிய கடிதம் கசிந்தது தொடர்பாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அது அவருக்கு எதிரான விரோதத்திற்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. அதை யார் கசியவிட்டார்கள் என்று அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். மேலும் கட்சிக்குள் இருப்பவர்கள் கட்சியை பலவீனப்படுத்துவதாகவும், கசிவை விசாரிப்பதற்குப் பதிலாக, தலைமை தனது அதிகாரத்தை தனக்கு எதிராகத் திருப்பியதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கிடையே கட்சி ஏற்கெனவே பல சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கவிதாவின் தொடர் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பேரில்தான், தற்போது கவிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா இயக்கத்தின் தலைவரும், பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, மார்ச் 13, 1978இல் பிறந்தார். தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்ற அவர், பட்டப்படிப்பு முடிந்தபின், 2004இல் இந்தியா திரும்புவதற்கு முன்பு அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். பின்னர், தனது தந்தையின், தெலங்கானாவுக்கான தனி மாநிலத்திற்கான இயக்கத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2006இல் ’தெலங்கானா ஜக்ருதி’ என்ற அரசு சாரா நிறுவனத்தைத் தொடங்கினார்.
தெலங்கானா நோக்கத்திற்காக இளைஞர்களையும் பெண்களையும் அணிதிரட்டிய பெருமை இந்த அமைப்பிற்கு உண்டு. மேலும், கவிதாவின் பெயர் பெரும்பாலும் தெலங்கானாவின் மலர் விழாவான பதுக்கம்மாவுடன் தொடர்புடையது. இதை அவர் விரிவாக விளம்பரப்படுத்தி வருகிறார். 2014இல் தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் தெலங்கானாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஐந்து மாதங்களாக அவர் சிறையில் இருந்தார். பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பைத் தொடர்ந்து அவர், திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.