telangana x page
இந்தியா

தெலங்கானா | நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு.. வெளியான அறிக்கை!

தெலங்கானா மக்கள் தொகையில் BCக்கள் (முஸ்லிம்களைத் தவிர்த்து) 46.25% ஆக உள்ளனர், BC முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 10.08% உள்ளனர்.

Prakash J

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது. முன்னதாக, பீகார் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்ற பிறகு, இந்தக் கோரிக்கை மீண்டும் வலுபெற்று வருகிறது.

telangana cm

இந்த நிலையில், தெலங்கானாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சாதி கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, மாநில மக்கள் தொகையில் 56.33% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினரும் அடங்குவர். சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி கணக்கெடுப்பின்படி, தெலங்கானா மக்கள் தொகையில் BCக்கள் (முஸ்லிம்களைத் தவிர்த்து) 46.25% ஆக உள்ளனர், BC முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 10.08% உள்ளனர்.

இதுதொடர்பாக அமைச்சரவை துணைக் குழுவிடம் அம்மாநில சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) 1,64,09,179 (46.25%) எனவும், பட்டியலின வகுப்பினர் (SC) 61,84,319 (17.43%) எனவும், பட்டியலின பழங்குடியினர் (ST) 37,05,929 (10.45%) எனவும், இதர சாதியினர் (OC) 44,21,115 (13.31%), முஸ்லிம் மதத்தினர் 44,57,012 (12.56%). இதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின முஸ்லிம்கள் (BC) 35,76,588 (10.08%) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

telangana

தெலுங்கானாவில் குறைந்தது 162 சமூகங்கள் பின்தங்கிய வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை ஐந்து குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன - A, B, C, D, E. இவற்றில், குழு C என்பது கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட பட்டியல் சாதியினரையும், குழு E என்பது சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கிய முஸ்லிம் வகுப்பினரையும் கொண்டுள்ளது.