Swiggy employee web
இந்தியா

'பசி எடுக்குறதையே மறந்துட்டேன்..' உடைந்து அழுத ஸ்விக்கி ஊழியர்! பேசுபொருளான #Viral_Video

பசி எடுக்குறதையே மறந்துட்டேன் என்று உடைந்து அழும் ஸ்விக்கி ஊழியரின் வீடியோ பலரின் மனதை கரைத்ததோடு இணையத்தில் விவாதமாகவும் வெடித்துள்ளது.

PT WEB

சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள வீடியோவில், ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் அழைப்பில் உணவருந்தி, தனது பசியை மறந்ததைக் கூறி உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். இந்த வீடியோ, உழைக்கும் வர்க்கத்தின் வலியை வெளிப்படுத்துவதோடு, மனிதாபிமானத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

செய்தியாளர் - இனியா

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது, இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. வீட்டு வாசலுக்கு உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களின் உழைப்பு, பல நேரங்களில் கவனிக்கப்படாமலே போய்விடுகிறது. ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, டெலிவரி ஊழியர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான மற்றும் அதே சமயம் பல விவாதங்களைக் கிளப்பும் ஒரு தருணத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறது.

அந்த வீடியோவில், ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு உணவு கொடுக்கச் செல்கிறார். அங்கு அவரை உணவருந்த அழைக்கும் வாடிக்கையாளர்கள், அவருடன் அமர்ந்து பேசுகிறார்கள். சாப்பிடும்போது அந்த ஊழியர் உணர்ச்சிவசப்பட்டு அழுவதைக் காண முடிகிறது. "காலையில் ஒரு கோப்பை டீ மட்டுமே குடித்தேன். நாள் முழுவதும் வேலை செய்ததில், எனக்கு பசி எடுப்பதையே நான் மறந்துவிட்டேன்" என்று அவர் கூறிய வார்த்தைகள் காண்போரை உருக்கியது.

தனக்கு ஒரு மகனும் மகளும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனது குடும்பத்தின் பசியைப் போக்க ஓயாமல் உழைக்கும் ஒரு தந்தை, தனது சொந்தப் பசியை எப்படிப் புறக்கணிக்கிறார் என்பதை அந்த உரையாடல் உணர்த்தியது. அந்த வாடிக்கையாளர்கள் அவருக்கு உணவளித்ததோடு, அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடுதல் உணவையும் அன்புடன் பார்சல் செய்து கொடுத்துள்ளனர்.

இருப்பினும், இந்த வீடியோ இணையத்தில் கலவையான கருத்துகளை உருவாக்கியிருக்கிறது. சலுகை பெற்ற பிரிவினர், உழைக்கும் வர்க்கத்தின் வலியைப் புரிந்துகொள்ள இத்தகைய வீடியோக்கள் உதவும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார்கள். ஒருவர் தனது பலவீனமான தருணத்தில் இருக்கும்போது, அதை வீடியோ எடுத்துப் பதிவிடுவது எந்த வகையில் அறமானது? மனிதாபிமானத்தைக் காட்டிக்கொள்ளப் புகழைத் தேடுவது தேவையா? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

Swiggy

மேலும், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த "தன் குழந்தைகளுக்காகப் பசியை மறந்த தந்தை" என்ற வாசகமும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். உழைப்பு என்பது பாலினத்தைத் தாண்டி அனைவருக்குமானது. லட்சக்கணக்கான பெண்கள் வீடுகளை நிர்வகிப்பதிலும், குடும்பத்துக்காக உழைப்பதிலும் சமமான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.