மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹுமாயூன் கபீர், புதிய கட்சியைத் தொடங்கினார். அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. அதற்குப் பிறகு தேர்தல் சிறப்பு திருத்த வாக்காளர் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரத்பூர் எம்.எல்.ஏவாக இருந்தவர் ஹுமாயூன் கபீர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மேற்கு வங்கத்தில் உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கான பணிகளை அவர் முன்னெடுத்ததை அடுத்து, டிசம்பர் 4ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். கட்சி ஒழுக்கத்தை மீண்டும் மீண்டும் மீறியதற்காகவும், திட்டத்துடன் தொடர்புடைய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதற்காகவும் டி.எம்.சி கடந்த வாரம் அவரை இடைநீக்கம் செய்தது. இதைதொடர்ந்து, டிசம்பர் 11ஆம் தேதி மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தின் பெல்டங்காவில் பாபர் மசூதி கட்ட கபீர் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, ஜனதா உன்னயன் கட்சியை (ஜே.யு.பி) என்று புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர், “ஜனதா உன்னயன் கட்சியின் (ஜே.யு.பி) கொடி - விரைவில் வங்காளம் முழுவதும் பறக்கும். மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவை எதிர்ப்பவர்களை கைகோர்க்க அழைக்கிறேன். நான் இடங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால், யாரேனும் தான் எல்லோரையும் விடப் பெரியவர் என்று நினைத்தால், நான் தனியாகப் போட்டியிடுவேன். தேவைப்பட்டால், மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவேன் தமது கட்சியின் சின்னமாக மேஜை மற்றும் இரட்டை ரோஜாக்களை விரும்புகிறேன். மாநிலத்தின் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தனது கட்சி ஒரு தளத்தை வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், ”மேற்கு வங்கத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தான் ஒரு கிங் மேக்கராக உருவெடுப்பேன். தனது அரசியல் அமைப்பின் ஆதரவு இல்லாமல் எந்த அரசாங்கத்தையும் அமைக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஐ.எஸ்.எஃப் உடன் கூட்டணி வைக்கத் தயாராக இருப்பதாக கூறிய அவர், 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார். அவரது புதிய அரசியல் கட்சியைவிட, அவருடைய பாபர் மசூதி கட்டப்படும் திட்டத்திற்குத்தான் வரவேற்பு பெருகியுள்ளது. இது, வரும் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இவருடைய புதிய கட்சியை பாஜக, திரிணாமுல் காங்கிரஸின் பி டீம் என விமர்சித்துள்ளது. மேலும், கபீர் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மறைமுகமாக உதவுவதற்காக அவர் பணியாற்றுகிறார் என்றும் அது விமர்சித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், கடந்த பத்தாண்டுகளில் முக்கிய அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவரான கபீர், மம்தா பானர்ஜியை விமர்சித்ததற்காகவும், அவர் தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டியதற்காகவும் 2015ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதற்குப் பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்குச் சென்றார். 2019ஆம் ஆண்டு பாஜக சார்பில் முர்ஷிதாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் அவர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பி 2021இல் பரத்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.