aravalli x page
இந்தியா

ஆரவல்லி மலைத் தொடர் விவகாரம் | தீர்ப்பு நிறுத்திவைப்பு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

200 கோடி ஆண்டுகள் பழமையானதாகவும், இமயமலையைவிட வயதானதாகவும் அறியப்படும் ஆரவல்லி மலைத்தொடர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை 692 கிலோமீட்டர் நீளத்துக்குப் பரவியுள்ளது. குறிப்பாக, 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீதப் பகுதியில் இந்த மலைத்தொடர் பரவி இருக்கிறது. நான்கு புலிகள் காப்பகங்கள் மற்றும் 22 வனவிலங்கு சரணாலயங்கள் உட்பட பல பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. மேலும், ஆரவல்லி என்பது வெறும் குன்றுகள் மட்டுமல்ல.

aravalli

அவை இயற்கையான உயிர்காக்கும் அமைப்புகள். தார் பாலைவனம் கிழக்கு நோக்கி நகர்ந்து வளமான இந்தோ-கங்கை சமவெளிக்குள் நுழைவதைத் தடுக்கும் சுவராக இவை செயல்படுகின்றன. இவை நிலத்தடி நீரைப் புதுப்பிக்கின்றன; ஒரு ஹெக்டேருக்கு இருபது லட்சம் லிட்டர் நீரைச் சேமிக்கும் திறன்கொண்ட நிலத்தடி நீர் அடுக்குகளை இவை ஊட்டி வளர்க்கின்றன. சம்பல், சபர்மதி மற்றும் லூனி போன்ற ஆறுகள் இங்குதான் பிறக்கின்றன. மேலும், இந்த மலைத்தொடர்கள் வடஇந்தியாவின் 'பசுமை நுரையீரல்' போலச் செயல்பட்டு,குறிப்பாக டெல்லி பகுதியில் தூசிப் புயல்களைக் குறைத்து மாசுபாட்டை வடிகட்டுகின்றன.

அப்படிப்பட்ட ஆரவல்லி மலைத்தொடர், கடந்த நவம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், தேசிய அளவிலான எதிர்ப்பைப் பெற்றது. ஆரவல்லி மலைத்தொடர் குறித்த வரையறையை மத்திய அரசு மாற்றியமைத்திருந்த நிலையில், இதை ஏற்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதாவது, ஆரவல்லி மலைத்தொடரில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த மலைக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதி எது என்பதில் வெவ்வேறு விதமான வரையறைகள் உள்ளன. எனவே, இந்த வரையறைகள் ஆரவல்லி மலைத்தொடர் முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘மலைத்தொடர்’ குறித்த புதிய வரையறையை வழங்கியது. அந்த புதிய வரையறைப்படி, தரைமட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரம் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட பகுதிகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராகக் கருதப்படும் என குறிப்பிடப்பட்டது.

aravalli

அதேபோல், இரண்டு குன்றுகளுக்கு இடையில் குறைந்தது 500 மீட்டர் இடைவெளி இருந்தால்தான் அது மலைத்தொடராகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தாக்கல் செய்த இந்த வரையறையை, உச்ச நீதமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்த புதிய வரையறை சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குச் சாதகமாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவீதம் அழிந்துவிடும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த நிலையில், ஆரவல்லி மலைத் தொடர் வரையறை குறித்த தனது தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், அதுகுறித்து ஆராய நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. மேலும், ஆரவல்லி மலைத்தொடர் எந்த அடிப்படையில் புதிய வரையறை உருவாக்கப்பட்டது என்பதைக் குறித்து தெளிவான பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.