இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வரதட்சணைக் கொடுமை என்பது இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாக இருக்கிறது. அதேநேரத்தில், சமீபகாலமாக ஒருசில பெண்கள் சுயநலத்திற்காக சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது வரதட்சணைப் புகார் அளித்து வருகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணம் உபியைச் சேர்ந்த நபர் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். இது, நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது. தவிர, இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணை குறித்த புகார் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜீவனாம்ச வழக்கு ஒன்றில். உச்ச நீதிமன்றம் “பெண்களின் நலனுக்கான விதிகளைக் காட்டி தங்கள் கணவர்களை அச்சுறுத்தவோ, மிரட்டி பணம் பறிக்கவோ பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள தனது முன்னாள் கணவரின் கணிசமான சொத்துகளைக் காரணம் காட்டி, ரூ500 கோடி ஜீவனாம்சம் கேட்டு அவரிடமிருந்த பிரிந்த மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவில், முதல் மனைவிக்கு ரூ.500 கோடி ஜீவனாம்சம் வழங்கியதாகவும் எனக்கு வெறும் 8 கோடி ஜீவனாம்சம் வழங்கியதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள், “திருமணத்தின்போது மனைவி தனது வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் பராமரிக்க உரிமை பெற்றாலும், பிரிந்தபிறகு அவரது முன்னாள் கணவரின் நிதி வெற்றியுடன் பிணைக்கப்பட்ட நிரந்தர எதிர்பார்ப்புக்கு இது நீட்டிக்கப்படவில்லை. விவாகரத்து செய்யப்பட்ட பெண், தனது முன்னாள் கணவரின் தற்போதைய சொத்துக்கு இணையாக நிரந்தர ஜீவனாம்சம் கோர முடியாது. பராமரிப்பு என்பது செல்வத்தை சமப்படுத்துவதற்கான வழிமுறையாகச் செயல்படுவதைவிட கண்ணியம் மற்றும் போதுமான தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களின் நலனுக்கான விதிகளை தங்கள் கணவர்களை அச்சுறுத்தவோ, மிரட்டி பணம் பறிக்கவோ பயன்படுத்தக் கூடாது. சிலர் கணவரின் வயதான பெற்றோர், தாத்தா பாட்டிகளைக்கூட கைது செய்ய வைக்கிறார்கள், அது கண்டிக்கத்தக்கது. சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் காரணமாக, விவாகரத்திற்குப் பிறகு கணவர் ஏழையாக மாறினால், மனைவி தனது செல்வத்தை பகிர்ந்துகொள்ள விரும்புவாரா? எதிர்காலத்தில் கணவரின் நிதி நிலைமை குறையுமாயின், முன்னாள் மனைவி தனது முந்தைய சம்பாத்தியத்தின் அடிப்படையில் மட்டுமே ஜீவனாம்சத்தில் அதிகரிப்பை எதிர்பார்ப்பது நியாயமற்றது. மேலும், ஜீவனாம்சம் நிர்ணயம் செய்வது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது, நேரடியாக எடுத்துக் கொடுக்க முடியாது” எனக் கூறிய் உச்ச நீதிமன்றம், இறுதியில், நீதிமன்றம் நிரந்தர ஜீவனாம்சத் தொகையான ரூ.12 கோடியை அளிக்க தீர்ப்பளித்தது. மேலும், மனுதாரருக்கு வீட்டுவசதி மற்றும் போதுமான அளவு ஆதரவளிக்க அனுமதி வழங்க உத்தரவிட்டது.
இந்த வழக்கின் உத்தரவு, அதிகப்படியான ஜீவனாம்சம் கோரிக்கைகள் மற்றும் விவாகரத்து வழக்குகளில் உள்நாட்டுச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துதல் பற்றிய அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும்போது தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ராஜ்னேஷ் vs நேஹா போன்ற முந்தைய வழக்குகளில், இருதரப்பினரின் சமூக மற்றும் நிதி நிலை, அத்தியாவசியத் தேவைகள், தகுதிகள் மற்றும் திருமணத்தின் போது பராமரிக்கப்படும் வாழ்க்கை முறை உட்பட நிரந்தர ஜீவனாம்சத்தை மதிப்பிடுவதற்கான எட்டு அத்தியாவசிய அளவுகோல்களை நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது. இந்த வழிகாட்டுதல்கள் விவாகரத்து தீர்வுகளில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் பராமரிப்பு தொடர்பான சட்ட விதிகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன.