உச்ச நீதி மன்றம் PT
இந்தியா

சடலத்துடன் உறவுகொள்வதை பாலியல் வன்முறைக்குள் கொண்டு வர முடியுமா? உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!

சடலத்துடன் உறவுகொள்வதை பாலியல் வன்முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Prakash J

கடந்த 2015ஆம் ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவர், தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்த 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து, சடலத்துடன் உறவு கொண்டார். இதையடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302, பாலியல் வன்புணர்வு செய்தல் 375 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் கர்நாடக உயர்நீதிமன்றம், ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், ’சடலத்துடன் உறவு என்பது பிரிவு 375-இன் கீழ் பலாத்காரம் ஆகாது; 377ஆம் பிரிவு இயற்கைக்கு மாறான உறவின் வரம்பில் வராது. பிரிவு 375, 377ஐ கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதன் அல்லது நபர் என்று அழைக்க முடியாது’ என்று விளக்கம் அளித்திருந்தது. மேலும் பாலியல் வன்புணர்வு வழக்கில் இருந்து ரங்கராஜ் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து 2023இல் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் மனு மீது விசாரணை நேற்று நடைபெற்றது.

உச்ச நீதிமன்றம்

அப்போது அரசு சார்பில், "இறந்த ஒருவரால் பாலியல் செயல்களுக்கு சம்மதிக்க முடியாது என்பதால், சடலத்தைப் பாலியல் வன்புணர்வு செய்வதை, பிரிவு 375இன் கீழ் கொண்டு வர வேண்டும். இந்தப் பிரிவில் ’உடல்’ என்ற வார்த்தையையும் ’இறந்த உடல்’ என்று கருத வேண்டும். பிரிவு 375ஐ ஆழமாகச் சென்று பார்க்கக் கூடாது. இறந்த உடல்களுக்கு, கண்ணியமும், நியாயமும் வழங்கப்பட வேண்டும்” என வாதம் வைக்கப்பட்டது.

இறுதியில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த பிரச்னையை பார்லிமென்ட்தான் ஆராய வேண்டும். தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரலாம். இதுதொடர்பாக அரசு, பார்லிமென்ட்டிற்கு கடிதம் எழுதலாம். சடலத்துடன் உறவைக் குற்றமாக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. பிரிவு 377இல் திருத்தம் செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நீதிமன்றம் உட்பட சர்வதேச நீதிமன்றங்கள் சடலத்துடன் உறவுகொள்வதை பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் கொண்டு வர தண்டனை சட்டத்தின் பிரிவுகளை விரிவுபடுத்தி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. இதனால் கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என அவர்கள் தெரிவித்தனர்.