ஞாவாபி, உச்ச நீதிமன்றம்
ஞாவாபி, உச்ச நீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

ஞானவாபி மசூதி: இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Prakash J

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாராணசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘ஞானவாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993ஆம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க: பண மதிப்பிழப்பு: மாறுபட்ட தீர்ப்பு தந்தது ஏன்? விளக்கமளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா!

இந்த வழக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வழிபாடு நடத்துவதற்கான அர்ச்சகரை நியமிக்கவும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரத்தில், வாராணசி நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று (ஏப்ரல் 1) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ’ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக மசூதி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையும் படிக்க: டெல்லி முதல்வர் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு.. இருவரும் பேசியது என்ன?