திரௌபதி முர்மு, பி.ஆர் கவாய் pt web
இந்தியா

”மசோதாக்களை கிடப்பில்போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” உச்சநீதிமன்றம் உத்தரவு !

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய முடியுமா? என்பது உட்பட 14 கேள்விகளுக்கு விளக்கமளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளையில், ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக கடந்த, 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க மாநில ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலநிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய முடியுமா? என்பது உட்பட 14 கேள்விகளுக்கு விளக்கமளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு கடந்த, செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, அந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டிருக்கிறது.

திரெளபதி முர்மு, உச்ச நீதிமன்றம்

14 கேள்விகளுக்கு விளக்கம் கோரிய குடியரசுத் தலைவர் திரௌபதிம் முர்மு-வின் மனு மீது இன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்றும் தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து, மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அரசியல் சட்டம் சில தனி உரிமைகளை ஆளுநருக்கு வழங்கியுள்ளது. ஆனால், காரணம் எதுவும் கூறாமல் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து, ஆளுநர்கள் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் ஆளுநர்கள் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

மேலும், அரசியல் சாசன பிரிவு 200 மற்றும் 201ன் படி ஆளுநர்களுக்கு மூன்று தேர்வுகள் மட்டுமே உள்ளன. ஒன்று, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது.. 2. சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம். மூன்றாவதாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க விருப்பமில்லை எனில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். இந்நிலையில், மத்தியரசு சொல்வது போல் ஆளுநருக்கு நான்காவது தேர்வு என்பது கிடையாது. அதன்படி, கால வரம்பின்றி மசோதாக்களை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குடியரசுத் தலைவர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய முடியாது என உத்தரவிட்டிருந்தாலும், மசோதாக்களுக்கு கால தாமதம் செய்ய ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.