10ஆவது முறையாக முதல்வராகும் நிதிஷ் குமார்.. பீகார் அரசியலில் கடந்து வந்த பாதை!
பீகார் அரசியல் களம் எத்தனையோ முதல்வர்களை கண்டிருந்தாலும் அதில் தனித்து தெரிபவர் நிதிஷ் குமார். பீகார் கடந்த 77 ஆண்டுகளில் 23 முதல்வர்களை கண்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆட்சியைத் தக்கவைத்துள்ள அக்கூட்டணியில் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் இன்று பதவியேற்க உள்ளார். அவர் 10ஆவது முறையாக அரியணை ஏறுகிறார். பீஹார் அரசியலில் அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். மத்தியில் வி.பி.சிங், வாஜ்பாய் அமைச்சரவைகளில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார் 2 ஆயிரமாவது ஆண்டில் பீகார் அரசியலுக்கே திரும்பினார். அப்போது நடந்த தேர்தலுக்கு பின் பீகார் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமார், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஏழே நாட்களில் பதவியிழந்தார். பின்னர் மீண்டும் தேசிய அரசியலுக்கு திரும்பி ரயில்வே அமைச்சரான நிதிஷ் 2005இல் மாநில அரசியலுக்கு திரும்பினார். 2005 அக்டோபரில் நடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த நிதிஷ் குமார் 15 ஆண்டு கால லாலுவின் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 2010ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு வென்று முதல்வர் ஆனார். அப்போது 2014இல் மக்களவை தேர்தலில் தங்கள் கட்சி தோற்றதால் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ். இவருக்கு பதில் ஜிதேன் ராம் மாஞ்சி முதல்வரானார்.
ஆனால் 9 மாதங்களுக்கு பின் மீண்டும் தானே முதல்வர் பதவியை ஏற்று 8 மாதங்கள்பதவியில் இருந்தார் நிதிஷ். நவம்பரில் நடந்த தேர்தலிலும் நிதிஷ்குமார் வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இம்முறை காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணிவைத்து வென்றிருந்தார். எனினும் இக்கூட்டணி 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்ததால் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியில் நீடித்தார் நிதிஷ்.
2020 தேர்தலிலும் வெற்றி கிடைத்த நிலையில் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தார் நிதிஷ். ஆனால் இது 2ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2022இல் காங்கிரஸ், ஆர்ஜேடியுடன்இணைந்து ஆட்சியை தொடர்ந்தார் நிதிஷ். ஆனால் இதுவும் 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2024இல் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியிலிருந்து வெளியேறிய அதே நாளில், பாஜகவுடன் சேர்ந்து 9ஆவது முறையாக முதல்வர் பதவியேற்றார் நிதிஷ் குமார். அதே கூட்டணியுடன் சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று 10ஆவது முறையாக முதல்வர் ஆகிறார் நிதிஷ் குமார்.
பீகார் அரசியல் களம் எத்தனையோ முதல்வர்களை கண்டிருந்தாலும் அதில் தனித்து தெரிபவர் நிதிஷ் குமார். பீகார் கடந்த 77 ஆண்டுகளில் 23 முதல்வர்களை கண்டுள்ளது. இதில் நிதிஷ் குமார் ஒருவர் மட்டும் 19 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளார். மற்ற 22 பேர் சேர்ந்து 58 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். இந்த ஒரு புள்ளிவிவரமே பீகார் அரசியலில் நிதிஷ் குமார் செலுத்திய ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும். 20 ஆண்டுகளில் இடையில் 9 மாதங்கள் தவிர்த்து பிற நாள்களில் முதல்வராக இருந்துள்ளார். இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த முதல்வர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கிறார். தற்போது மீண்டும் 10ஆவது முறையாக அரியணை ஏறுகிறார். 5 ஆண்டுகளும் அப்பதவியில் இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர்கள் பட்டியலில் பவன்குமார் சாம்லிங், நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அடுத்த இடத்தை அவர் பெறுவார்.

