உச்ச நீதிமன்றம், வக்ஃப் எக்ஸ் தளம்
இந்தியா

வக்ஃப் சட்டம்: சில பிரிவுகளுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

வக்ஃப் சட்டத்திற்கு முழுமையான தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது.

Prakash J

வக்ஃப் சட்டத்திற்கு முழுமையான தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது.

வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கிய மத்திய அரசு, அதை கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. பின்னர், அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் அது சட்ட வடிவம் பெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து சுமார் 70 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதன் மீதான இடைக்கால உத்தரவை வழங்கியது. திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம் முழுமைக்கும் தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ்மாஸி அமர்வு கூறியது.

உச்ச நீதிமன்றம்

அதேநேரம், 5 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்ஃப் சொத்தை வாங்க முடியும் என்ற விதிக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் கூறினர். அரசு நிலத்தை வக்ஃப் சொத்து ஆக்கிரமித்துள்ளதா என்பதை அரசால் நியமிக்கப்பட்ட உயரதிகாரி முடிவு செய்வார் என்ற பிரிவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய தலைமை அதிகாரியாக இஸ்லாமியர் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்ற விதிக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இயன்றவரை இஸ்லாமியரையே தலைமை அதிகாரியாக்கும் நடைமுறை வேண்டும் என அறிவுறுத்தினர். வக்ஃப் வாரியம், மத்திய வக்ஃப் கவுன்சிலில் இஸ்லாமியர் அல்லாதவர்களை சேர்க்கலாம் என்றும் ஆனால், அவர்கள் எண்ணிக்கை மூன்றுக்கும் மிகக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வக்ஃப் சட்டத்திருத்தத்தில் எந்தெந்த அம்சங்களுக்கெல்லாம் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது... எவற்றுக்கெல்லாம் தடையில்லை என்பது பற்றிப் பார்க்கலாம்...

வக்ஃப் சட்டத்திருத்தம்: எவற்றுக்கெல்லாம் தடை?

  • ஒரு நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்ஃப்க்குச் சொத்தை வழங்க முடியும் என்ற திருத்தத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு உள்ளானதா என ஒரு குறிப்பிட்ட அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அந்தச் சொத்து வக்ஃப் சொத்தாகக் கருதப்படாது என்ற விதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • வக்ஃப் நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.

  • மத்திய வக்ஃப் கவுன்சிலில் நான்கிற்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரைச் சேர்ப்பது, மாநில வக்ஃப் வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரைச் சேர்ப்பதற்கும் தடை விதித்துள்ளது.

waqf board

வக்ஃப் சட்டத்திருத்தம்: எவற்றுக்கெல்லாம் தடையில்லை?

  • முந்தைய வக்ஃப் சட்டத்திலிருந்து ‘பயனர் மூலம் வக்ஃப்' என்ற பிரிவை மத்திய அரசு நீக்கியதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

  • இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் நினைவுச் சின்னங்களுக்கான வக்ஃப் அந்தஸ்தை நீக்குதலுக்கும், பழங்குடி நிலங்கள் வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்படுவதற்கான தடை அம்சத்திற்கும் உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

  • இஸ்லாமியர் அல்லாதவர்கள் வக்ஃப்களை உருவாக்க அனுமதிக்கும் விதியை நீக்குதலுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை.