மத்தியப் பிரதேசத்தின் தாரிலுள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் நாளை (ஜன.23) இந்து மற்றும் முஸ்லிம் இருவரும் பிரார்த்தனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் போஜ்ஷாலா என்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மத வழிபாட்டுத் தலத்திற்கு இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர். போஜ்ஷாலா வளாகம் இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் வழிபாட்டுத் தலம் என்று இந்து மதத்தினரும், அது, மவுலா மசூதி என்று இஸ்லாமிய மதத்தினரும் கூறுகின்றனர். இந்த கட்டடத்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே சுமூக தீர்வை எட்டும் வகையில் 2003ஆம் ஆண்டு இந்திய தொல்லியல்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவுபடி போஜ்ஷாலா கட்டடத்தில் இந்து மதத்தினர் செவ்வாய்க் கிழமை வழிபாடு செய்யலாம் என்றும் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போஜ்ஷாலா கட்டடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு செய்து வந்தனர்.
இதற்கிடையே, நாளை (ஜன.23) நாள் முழுவதும் சரஸ்வதி பூஜை நடத்துவதற்கு போஜ் உத்சவ் குழு அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தது, அதே நேரத்தில் முஸ்லிம் சமூகம் வெள்ளிக்கிழமை (நாளை) தொழுகையை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை நடத்த ஒப்புதல் கோரி ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ’ஜனவரி 23, வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை விழா வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகையுடன் ஒத்துப்போவதால், இந்து மற்றும் முஸ்லிம் பக்தர்கள் இருவரும் பிரார்த்தனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மசூதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என்றும், தொழுகை முடிந்த உடனேயே கூட்டம் கலைந்து செல்லும் என்றும் ஒரு முன்மொழிவை நீதிமன்றம் பரிசீலித்தது. சரஸ்வதி பூஜையை அந்த இடத்தில் நடத்துவதற்கு இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழாவையொட்டி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் விரைவு நடவடிக்கைப் படையைச் சேர்ந்தோர் உட்பட கிட்டத்தட்ட 8,000 போலீசார் தார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கண்காணிப்பு, கால் நடை மற்றும் வாகன ரோந்து மற்றும் சமூக ஊடக செயல்பாடு ஆகியவை நகரம் முழுவதும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
முன்னதாக, மார்ச் 2024 இல், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அந்த இடத்தின் அசல் தன்மையைக் கண்டறிய அறிவியல் ஆய்வுக்கு உத்தரவிட்டது. சமஸ்கிருத கல்வெட்டுகள் மற்றும் சிதைக்கப்பட்ட இந்து தெய்வங்கள் உட்பட முன்பே இருந்த கோயில் கட்டமைப்புகளுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததாக ஜூலை 2024இல் ASI அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.