எஸ்.ஐ.ஆர் பணிகளை தற்காலிகமாக நிறுத்தக்கோரிய கேரள அரசின் மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கேரள அரசை தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக தொடர்ந்த மனுக்கள் மீது பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வரும் நிலையில்,கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்காலிகமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யகாந்த தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றதோடு, கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலுக்கு இடையே வாக்காளர் தீவிர திருத்தம் செய்வது பல இன்னல்களை உருவாக்கியுள்ளது என்றும் வாதம் முன் வைத்தார்.
தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் தரப்பு எதிர்ப்பை நிராகரித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சூர்யாகாந்த் புதிய மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான தயாரிப்புகளுக்கு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் SIR நடவடிக்கையிலும் மிகப் பெரிய அளவில் பணியாளர்கள் தேவைப்படுவதாக கேரள அரசு தெரிவிக்கிறது. இதனால், தேர்தல் பணிகளில் குழப்பம், பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் போன்ற முக்கிய செயல்பாடுகள் தாமதம், வாக்காளர்களின் உரிமை பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகலாம் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "இந்த நேரத்தில் SIR நடத்த அவசரம் இல்லை" என்று அரசு தனது மனுவில் குறிப்பிடுகிறது. இந்நிலையில், கேரள அரசை தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களும் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.