பூஜா கேட்கர் எக்ஸ் தளம்
இந்தியா

UPSC தேர்வில் முறைகேடு | ”கொலையா செய்துவிட்டார்?” பூஜா கேட்கருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

UPSC தேர்வில் முறைகேடு எழுந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், பூஜா கேட்கருக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்துக் காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இமெயில் ஐடி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதையடுத்து, பூஜாவின் ஐஏஎஸ் தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு யுபிஎஸ்சி போர்டு பூஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை. இந்த நிலையில்தான் அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்தது. வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், அவரை இந்திய நிர்வாக சேவையிலிருந்தும் (ஐஏஎஸ்) மத்திய அரசு உடனடியாக நீக்கியது.

பூஜா கேட்கர்

இதற்கிடையே, டெல்லி போலீஸார் பூஜா மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இதனால் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.வி.நாகரத்னா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பூஜா கேட்கர் செய்த பெரிய குற்றம் என்ன? அவர், கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் NDFS குற்றத்தில் ஈடுபடவில்லை. வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்க வேண்டிய பொருத்தமான வழக்கு இது. பூஜா கேட்கர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவருக்கு முன்ஜாமின் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.