UPSC தேர்வில் முறைகேடு| பூஜா கேட்கருக்கு முன்ஜாமீன் மறுப்பு..
UPSC தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பூஜாகேத்கர்
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்துக் காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர், வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், அதை மாநில அரசு நிறுத்திவைத்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இமெயில் ஐடி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், அவர்மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையே, தன்னை துன்புறுத்தியதாக புனே மாவட்ட ஆட்சித் தலைவர் மீது பூஜா புகார் கொடுத்திருந்தார். அதன்மீது வாக்குமூலம் வாங்க பூஜாவை போலீஸார் தொடர்புகொள்ள முயன்றனர். அவரது செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அகமத் நகரில் உள்ள அவரது வீட்டிலும் அவர் இல்லாததாலும் பூஜாவை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவானதாகச் செய்திகள் வெளியாகின.
யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை
மேலும், பூஜா கொடுத்திருந்த மாற்றுத்திறனாளி சான்று குறித்து விசாரணை நடத்தும்படி புனே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதோடு, அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதையடுத்து, பூஜாவின் ஐஏஎஸ் தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு யுபிஎஸ்சி போர்டு பூஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை. இந்த நிலையில்தான் அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்தது. வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூஜா கேட்கரின் தேர்வை ரத்து செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அவரை இந்திய நிர்வாக சேவையிலிருந்து (ஐஏஎஸ்) மத்திய அரசு உடனடியாக நீக்கியது.
இதற்கிடையே, மோசடி வழக்கு தொடர்பாக பூஜா கேட்கர் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துள்ளது.
பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் மறுப்பு
முன்னதாக, அவருடைய ஜாமீனுக்கு டெல்லி காவல்துறையும் UPSC-யும் எதிர்ப்பு தெரிவித்தன. கேட்கரை விசாரிக்கவும், குற்றச் செயலில் மற்றவர்களின் தொடர்பைக் கண்டறியவும் அவருடைய தேவை என காவல் துறை தரப்பில் வாதமாக வைக்கப்பட்டது. இதையடுத்தே அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதி சந்திரதாரி சிங், ”அவரது நடவடிக்கைகள் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அவர், நியமனத்திற்குத் தகுதியற்றவர் என்றும் கவனிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள், போலி மற்றும் ஏமாற்றுதல் ஆகியவை அடங்கும். இது ஓர் அதிகாரம் மட்டுமல்ல, தேசமும் செய்த மோசடிக்கு ஓர் உன்னதமான எடுத்துக்காட்டு. மனுதாரரின் நடத்தை முற்றிலும் புகார்தாரர், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. இதில் வழக்குப் பதிவு வலுவாக செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டும். அதற்கு விசாரணை அவசியம். முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” எனக் கூறி அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.