நிமிஷா பிரியா, SC x page
இந்தியா

ஏமன் | கொலை வழக்கில் கேரள நர்சுக்கு மரண தண்டனை.. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் ஏமனின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை கொண்டது.

Prakash J

கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் ஏமனின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. சேவ் நிமிஷா பிரியா அதிரடி கவுன்சில் என்ற அமைப்பு, தூதரக ரீதியாக தனது பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. அதன்படி இந்த மனு மீதான விசாரணையை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, ”இந்த வழக்கில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த எல்லை வரை செல்ல முடியுமோ, அதன்வரை சென்று முயன்றது. மரண தண்டனையை நிறுத்தி வைக்க முடியுமா என்று அங்குள்ள வழக்கறிஞரிடம் கேட்டோம். ஆனால் அது நடக்கவில்லை. ஏமன் அரசுக்கு எதுவும் முக்கியமில்லை. மரண தண்டனை தள்ளி வைக்கப்படும் என்று இடையில் ஒரு தகவல் வந்தது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு மீறி அரசு எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இழப்பீடாக பணம் அளித்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது தனிப்பட்ட பேச்சுவார்த்தையாக உள்ளது" என வாதம் வைத்துள்ளார்.

நிமிஷா பிரியா

முன்னதாக, இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் குடும்பத்தினரால், ஏமன் நபரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் டாலர் (ரூ. 8.5 கோடி) வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.