தலைநகர் டெல்லியை அலங்கரிக்கும் வகையில், பழங்கால கட்டடக்கலைகளில் ஒன்றாகச் சிறந்து விளங்குகிறது, செங்கோட்டை. இங்குதான் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடியேற்றும் வழக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது இந்த கோட்டையின் பெரும்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், கடைசி முகலாய அரசர் பகதுார் ஷா ஜாபரின் வாரிசு என்று கூறிக்கொண்டு சுல்தானா பேகம் என்ற பெண், 'டெல்லி செங்கோட்டை எனக்குத்தான் சொந்தம்' என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ''ஏன், செங்கோட்டை மட்டும் போதுமா? ஃபதேபூர் சிக்ரி (16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசின் தலைநகரம்), தாஜ்மஹால் (17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் பிரபலமாக கட்டப்பட்டது) போன்றவற்றை எல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்?'' என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். பின்னர், தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி அதைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஹவுராவில் வசிக்கும் சுல்தானா பேகம், செங்கோட்டையின் அசல் உரிமையாளர்களின் நேரடி வம்சாவளி, அதாவது முகலாயப் பேரரசர்களின் நேரடி வம்சாவளி என்ற காரணத்தைக் கூறி, அதைக் கைப்பற்ற மனுத் தாக்கல் செய்திருந்தார். 1960ஆம் ஆண்டு, தனது (இப்போது இறந்துவிட்ட) கணவர் பேதர் பக்த், பகதூர் ஷா ஜாபர் II-ன் வழித்தோன்றல் (கடைசி முகலாய பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா ஜாபரின் கொள்ளுப் பேரனின் மனைவி) மற்றும் வாரிசு என்ற கூற்றை அரசாங்கம் உறுதிப்படுத்தியதாக சுட்டிக்காட்டி இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, இதே கோரிக்கையுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது, தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்தே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2021ஆம் ஆண்டு தொடரப்பட்டு இந்த வழக்கில், “அரசாங்கம் செங்கோட்டையை 'சட்டவிரோதமாக' கையகப்படுத்தி உள்ளது. அதன் சொத்து மற்றும் வரலாற்று மதிப்புக்கு ஏற்ப போதுமான இழப்பீடு வழங்க விரும்பாதது, அரசியலமைப்பின் 300A பிரிவின் கீழ் தனது அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமைகளை நேரடியாக மீறுவதாகிறது” என அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து அரசாங்கம், அவருக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. எனினும், அது போதவில்லை என்பதாலேயே இந்த மனுவை அவர் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.
முகலாயர் ஆட்சிக் காலத்தில், 17ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட செங்கோட்டையானது, முழுவதும் சிவப்பு மணற்கற்களால் ஆனது. சிவப்பு நிற கற்கல் பயன்படுத்தி கட்டப்பட்டதாலே, இது செங்கோட்டை என்று பெயரிடப்பட்டது. இந்த கோட்டை சுமார் 254 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் உயரமான சுவர்களால் சூழப்பட்டுள்ளது.
இந்த கோட்டைக்கு பல நுழைவாயில்கள் உள்ளன. செங்கோட்டையின் மதில் சுவர்கள், 2.41 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகும். இதை கட்டி முடிக்க 9 ஆண்டுக்காலம் ஆனது. அப்போதைய மதிப்பிலேயே இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 1857ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு, செங்கோட்டை முகலாயர்களிடமிருந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான முதல் கிளர்ச்சிகளை ஆதரித்த பகதூர் ஷா ஜாபர் II நாடுகடத்தப்பட்டு, அவரது நிலங்களும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.