யாசின் ஷான் முஹம்மது x page
இந்தியா

அன்று டெலிவரி பாய்.. இன்று நீதிபதி | கேரளாவில் சாதனை படைத்த இளைஞர்! சிலிர்க்க வைக்கும் வெற்றிப்பயணம்

2024ஆம் ஆண்டு கேரள நீதித்துறை சேவைகள் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்த யாசின் ஷான் முஹம்மதுவின் வெற்றிக் கதைதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தவர், யாசின் ஷான் முஹம்மது. இவருடைய அன்னைக்கு 14 வயதில் திருமணம் நடைபெற்றது. இதனால் அவர், ஆறாம் வகுப்புடனேயே பள்ளியை முடித்துக்கொண்டார். எனினும், அவருடைய 15வது வயதில் யாசின் ஷான் பிறந்தார். அதன்பிறகு அவருடைய 19வது வயதில் தனது கணவரை விவாகரத்து செய்தார். இதனால், சிறுவயது முதல் யாசின் தன் தந்தையைத் தொடர்புகொள்ளவே இல்லை. அவரை, அவரது அன்னையும் பாட்டியுமே வளர்த்தனர்.

மாநில அரசின் வீட்டுவசதி வசதி வாரியம் வீடு ஒன்றை வழங்கியிருந்தது. என்றாலும் வருமானத்துக்காக அவரது தாயார் கூலி வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், யாசின் பழைய ஆடைகளையே அணிய வேண்டியிருந்தது. மேலும் புத்தங்கள் வாங்கிப் படிப்பதற்கும் அவரிடம் காசு இல்லை. எனினும், அவருக்குள் படிக்க வேண்டும் என ஓர் ஆசை இருந்ததால், சிறுவயதிலேயே வீடுகளுக்கு பேப்பர் மற்றும் பால் பாக்கெட் போடும் வேலைக்குச் சென்றார். சில நேரங்களில் கட்டட வேலை செய்யும் தொழிலாளியாகவும் இருந்துள்ளார்.

யாசின் ஷான் முஹம்மது

இப்படி, நாட்களைக் கடத்திய அவர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அடுத்து, எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படித்து, ஓராண்டு பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். அத்துடன் சட்டம் படிக்க முடிவு செய்த அவர், சட்ட நுழைவுத்தேர்வில் 46வது ரேங்க் பெற்று எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். இங்கிருந்து அவர் எல்.எல்.பி முடித்தார். இந்த காலகட்டத்தில் அவர் குழந்தைகளுக்கும் டியூசன் சொல்லிக் கொடுத்தார். தவிர, டெலிவரி பாய் ஆகவும் பணியாற்றினார். இருப்பினும், கோவிட் காலத்தில் இந்த வேலை நிறுத்தப்பட்டது.

யாசின் 2023ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரின்கீழ் பணிபுரிந்தபோது, ​​அவரது சக ஊழியர்கள் இருவர் நீதித்துறை சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவரது மூத்தவர்களும் சக ஊழியர்களும் யாசினை தேர்வெழுத ஊக்கப்படுத்தினர். இதைத் தொடர்ந்து தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.

இந்த நிலையில்தான், கேரள நீதித்துறை தேர்வில் யாசின் இரண்டாம் இடம்பிடித்தார். அவரால், முதல் முயற்சியிலேயே மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் இரண்டாவது முயற்சியில் இரண்டாம் ரேங்க் பெற்று தனது கனவை நனவாக்கினார். இதையடுத்து, அவர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.