“ஒருபுறம் மிகத் துயரம்.. மறுபுறம் உலகக் கோப்பை” - குரு சுந்தரியின் வலி நிறைந்த வெற்றிக்கதை
மலேசியாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த கபடி உலகக் கோப்பை மகளிர் போட்டியில் இந்திய அணி வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஓரே ஒரு வீர மங்கை பங்கேற்றார். அவர்தான் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த குருசுந்தரி. உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்றாலும், இந்த இடத்தை அடைவதற்கு இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. அவரது கபடி பயணத்தை அறிந்துகொள்ள புதிய தலைமுறை சார்பில் அவரிடம் பேசினோம்.
பள்ளிப்பருவத்திலிருந்து கபடி விளையாடுவதாக பேசத் தொடங்கிய அவர், “படித்ததெல்லாம் மாநகராட்சி பள்ளியில் தான். நான் 9ஆம் வகுப்பு முதல் கபடி போட்டியை விளையாடி வருகிறேன். விளையாட்டாக கபடியை விளையாடத் தொடங்கினேன். ஆனால் அதுவே என் வாழ்க்கையாக மாறிவிட்டது. பள்ளி படிக்கும் போது நான் விளையாடிய அணி மாநில அளவில் பதக்கம் வென்றது. அன்று முதல் கபடியின் மீது அதிக ஆர்வம் கொண்டேன். பள்ளி பருத்துவத்தில் நான் ஆட ஆரம்பித்த கபடி, இன்றும் ஓயவில்லை. பள்ளியிலிருந்தே எனக்கு பக்கபலமாக இருந்தது எனது பயிற்சியாளர்கள் தான். தேவா, ஜனா என்ற இரண்டு பயிற்சியாளர்களும் தான் என்னை உருவாக்கினார்கள்.
எங்கள் பள்ளிக் கபடி அணியை அப்படியே ஒரே கல்லூரியில் சேர்த்துவிட்டனர். நாங்கள் அங்கும் எங்களது விளையாட்டை தொடர்ந்தோம். தமிழக அணி சார்பில் 10 முறை தேசிய போட்டிகளில் நான் விளையாடினேன். 4 முறை சீனியர் தேசிய அணிக்கு கேப்டனாக இருந்தேன். அதன்பின்னர் ஆசிய போட்டிகளுக்கு இந்திய அணிக்கான அணித் தேர்வு முகாமில் பங்கேற்றேன். ஆனால் அணிக்கு தேர்வாகவில்லை.
அதன்பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து பயிற்சியை தொடங்கினேன். எனக்கு இரண்டு சகோதரிகள். எங்கள் குடும்பம் வறுமையான நிலையில் இருந்தது. வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு வந்தேன். வீட்டிலும் வேலைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். கபடி வாழ்க்கை முடிந்துவிடுமோ எனத் தோன்றியது. ஆனால் எனது பயிற்சியாளர்கள் என்னை தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லவிடமால், எனது வீட்டில் பேசினார்கள்.
இருப்பினும் என்னைப் போன்று இல்லாமல் நிறைய பெண்கள் கல்லூரிக்கு பின்னர் வேலைக்கு சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு முறையான வழிகாட்டல் இருக்காது. அப்படி செல்லும்போது விளையாட்டை விட்டுச் செல்கிறோமே எனத் தோன்றும் வலி சொல்ல முடியாதது.
அதன்பின்னர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக சேர்ந்தேன். மாலையுடன் பள்ளி முடிந்துவிடும். அதன்பின்னர் பயிற்சி எடுக்கலாம் என்பதால் எனது பயிற்சியாளர்களும் ஒப்புக்கொண்டனர். அந்த வருமானம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏனென்றால் கிரிக்கெட் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் அளவிற்கு ஸ்பான்ஸர்கள் கபடிக்கு கிடைப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு கிடைப்பது அரிது. இருந்தாலும், எனது பயிற்சியாளர்கள் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்தார்கள். எனக்கு வீட்டில் திருமணப் பேச்சு நடைபெற்ற போது, பெற்றோரிடம் பேசி என்னை தொடர்ந்து விளையாட வைத்தார்கள். ஜனா என்ற பயிற்சியாளர்கள் என்னை இந்திய அணியின் உடையில் பார்க்காமல் உயிரை விடமாட்டேன் எனக் கூறிக்கொண்டே இருப்பார்.
(மேலே இருப்பவர் உயிரிழந்த பயிற்சியாளர் ஜனா)
இதையடுத்து வனத்துறையில் வேலை வாய்ப்பு கிடைத்து, அதில் சேர்ந்தேன். சேர்ந்து பணிக்கான பயிற்சியில் இருக்கும்போது, சர்வதேச கபடி உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு ஹரியானாவில் நடந்தது. பயிற்சியில் இருக்கும்போது என்னை மீண்டும் கபடிக்கு செல்ல அனுமதிப்பார்களா என நினைத்தேன். ஆனால் வனத்துறையில் எனக்கு ஊக்கமளித்து என்னை விளையாட அனுமதித்தார்கள். ஹரியானாவில் சென்று விளையாடி, இந்திய அணியிலும் இடம்பெற்றேன். பயிற்சிக்காக மதுரையில் முகாமிட்டு கபடி விளையாடினோம். இந்திய அணியின் உடையை போட்டு விளையாடப் போகிறேன் என நினைத்து கொண்டிருந்த தருணத்தில், எனது வாழ்வின் மிகத்துயரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
என்னை இந்திய அணியின் உடையில் பார்க்க வேண்டும் என்று என்னைவிட அதிகமாக ஆசைப்பட்ட பயிற்சியாளர் ஜனா மாரடைப்பால் இறந்தார். அந்த செய்தியை கேட்டதும் உடைந்துபோனேன். அவரது உடலை காண சென்றேன். ஆனால் என்னை காண வேண்டாம் என்றும், கபடியில் கவனம் செலுத்துமாறும் அனுப்பிவிட்டார்கள். உள்ளம் நிறைய வலியுடன் சென்று கபடியை விளையாடினேன். எனது பயிற்சியாளர் கூறியவற்றை மனதில் வைத்து உலகக் கோப்பையில் விளையாடினேன்.
உலகக் கோப்பையில் இந்திய அணி தங்கத்தை வென்றது. நானும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் என்னை போன்று எத்தனையோ பெண்கள் நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோர் ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தினால் ஏராளமான வீராங்கனைகள் வருவார்கள்” என்றார்.