ஆசிரியை ஜெயஸ்ரீ
ஆசிரியை ஜெயஸ்ரீ புதிய தலைமுறை
இந்தியா

பள்ளியில் பணம் திருடியதாக உடைகளைக் களைந்து சோதனை செய்த ஆசிரியை - மாணவி எடுத்த விபரீத முடிவு!

webteam

கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே கடம்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருபவர் கன்னட ஆசிரியை ஜெயஸ்ரீ. கடந்த 14ம் தேதி பள்ளிக்கு 2,000 ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளார் இவர். அந்தப் பணம் திடீரென காணாமல் போயுள்ளது.

இவ்விவகாரத்தில் 10 ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மற்றும் 8ம் வகுப்பு மாணவி திவ்யா என 5 பேர் மீது ஆசிரியை ஜெயஸ்ரீக்கு சந்தேகம் வந்துள்ளது.

அதன்பேரில் மாணவி திவ்யா மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகளை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று ஜெயஸ்ரீ, தலைமை ஆசிரியர் முஜாவர், அறிவியல் ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் அவர்களின் உடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளனர்.

மேலும் டி.சி கொடுத்துக் கொடுத்து விடுவோம் என மாணவிகளை மிரட்டியுள்ளனர். இதில் அங்கிருந்த துர்காதேவி அம்மன் கோவிலுக்கு மாணவி திவ்யாவை அழைத்துச் சென்று, பணத்தை எடுக்கவில்லை எனச் சத்தியம் செய்ய வைத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து போன மாணவி திவ்யா, அடுத்தடுத்த நாட்களில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார் திவ்யா. தகவலறிந்து வந்த காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.

என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்த திவ்யாவின் பெற்றோரிடம், சக மாணவிகள் நடந்த சம்பவம் குறித்தும் ஆசிரியர்கள் செய்த கொடுமை குறித்தும் தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த திவ்யாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியை ஜெயஸ்ரீ, தலைமை ஆசிரியர் முஜாவர் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.