விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி முத்து சுடலி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்தநிலையில், கடந்த 10 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. போதிய வருமானம் இல்லாததால் முத்து சுடலி 2வது குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். தனது தோழியான முகவூரை சேர்ந்த ராஜேஸ்வரியிடம் யோசனை கேட்டுள்ளார்.
பின்னர் ராஜேஸ்வரியின் நண்பர் தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த ஜெயபால் என்பவரின் ஆலோசனையின் படி, ஈரோடு மாவட்டம் மாணிக்கப் பாளையத்தைச் சேர்ந்த தம்பிராஜ் என்பவருடைய மனைவி அசினாவிடம் ரூபாய் 3.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு முத்து சுடலி தனது குழந்தையை விற்பனை செய்துள்ளார். இதற்கு ஈரோட்டைச் சேர்ந்த ரேவதி என்பவர் உதவி செய்துள்ளார்.
இதனையடுத்து குழந்தை விற்பனை நடைபெறுவது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசிய ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் குழந்தைகள் நலப் பாதுகாப்பு மைய அதிகாரி திருப்பதி முத்துசுடலியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது முத்து சுடலி, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மைய பாதுகாப்பு அதிகாரி சேத்தூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முத்துசுடலிடம் விசாரணை நடத்தியதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஈரோடு சென்ற போலீசார் அசினாவிடம் இருந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அசினாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே அவருக்கு இரண்டு திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதும், இவரது தோழி ரேவதியுடன் சேர்ந்து பச்சிளம் குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்வதைத் தொழிலாகச் செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், இருவர் மீதும் ஏற்கனவே குழந்தை விற்பனை தொடர்பாகப் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பியோடிய ஜெயபாலை போலீசார் தேடி வருகின்றனர்.
பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.