SREEJITH RAVI SREEJITH RAVI INSTA
இந்தியா

கும்கி பட நடிகருக்கு ஓராண்டு சிறை.. சிறுமிகள் முன்பு ஆபாச செயல்.. போக்சோ வழக்கில் அதிரடி!

சிறுமிகள் முன்பு ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கில், கும்கி பட நடிகருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீஜித் ரவி. மூத்த நடிகர் டி.ஜி.ரவியின் மகனான இவர், மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் பிரபு நடித்த கும்கி திரைப்படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானார். இதுதவிர வேட்டை, மதயானைக் கூட்டம், கதகளி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

SREEJITH RAVI

கடந்த 2022ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அய்யந்தோல் பகுதியில் இரண்டு சிறுமிகள் தங்களது குடியிருப்பு வளாகம் அருகே இருந்துள்ளனர். அப்போது காரில் வந்த ஒருவர், சிறுமிகள் முன்பு தனது ஆபாசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் காரின் விவரங்களை ஆய்வு செய்த போலீசார், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பதை அடையாளம் கண்டனர். தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டும் பாலக்காடு பகுதியில் பள்ளி மாணவிகள் முன்பு ஆபாசமாக நடந்துகொண்டதாக ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SREEJITH RAVI

சுமார் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், திருச்சூர் விரைவு சிறப்பு நீதிமன்றம் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பான போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீஜித் ரவி குற்றவாளி எனத் தீர்மானித்த நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. மேலும், அபராதத் தொகை வசூலிக்கப்பட்டால் அதை பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஸ்ரீஜித் ரவி விருப்பம் தெரிவித்ததால், தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்திவைத்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.