சென்னையிலிருந்து டில்லிக்கு வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஊரடங்கின் ஒரு பகுதியாக மார்ச் 25 ஆம் தேதி ரயில்வே போக்குவரத்துதடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை முதல் பயணிகளுக்கான சிறப்பு ரயில்கள் இயங்கும் என ரயில்வே துறை அறிவித்தது.
அதன் படி இந்தச் சிறப்பு ரயில்கள் புது டெல்லியிலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புபனேஷ்வர், செகுந்தராபாத், பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம், மடகான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ரயில் நிலையங்களிடையே இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று பிரதமருடனான முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொரோனா பரவல் அதிகமிருப்பதால் சென்னை வழியே ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் ரயில்வே துறை முதல்வரின் கோரிக்கையை நிராகரித்து. இந்நிலையில் சென்னையிலிருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.