Belonging: A Journey of Love PTI
இந்தியா

நான் ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை? - சோனியா காந்தியின் சுயசரிதை!

பென்குயின் பதிப்பகம் விலகல் உள்ளிட்ட பல தடைகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் சுயசரிதையான 'Belonging: A Journey of Love' புத்தகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது.

Premkumar S

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சுயசரிதை புத்தகமான 'Belonging: A Journey of Love' உலகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 544 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை  'ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதலில் இந்தப்புத்தகத்தை பென்குயின் பதிப்பகம் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கக்கோரி, அந்தப் பதிப்பகம் பரிந்துரை வழங்கியதை சோனியா மறுத்த நிலையில், இந்தியாவில் வெளியிடுவதில் இருந்து விலகியது பென்குயின் பதிப்பகம்.

இதைத் தொடர்ந்தே, சோனியாகாந்தி சுயசரிதைப் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமையை பெற்றது  'ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம். இந்தச்சூழலில் தான், இன்று (நவம்பர் 10) 'Belonging: A Journey of Love' புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய புத்தகக் கடைகளில் இந்த புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியை ஏன் நிராகரித்தேன்?

இந்த சுயசரிதை புத்தகம் குறித்து, சோனியாகாந்தி பல்வேறு பேட்டிகளிலும், சமூகவலைதள காணொளிகளிலும் பேசியிருந்த படி, இத்தாலியில் இளைமைப்பருவம், முன்னாள் பிரதமரும் அவரது கணவருமான ராஜீவ்காந்தியை சந்தித்தது உள்ளிட்ட பல்வேறு தகவல் இந்தப் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன.

இந்தச்சூழலில் தான், 2004 ஆம் ஆண் தான் ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை? என இந்தப்புத்தகத்தில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சோனியாகாந்தி - மன்மோகன் சிங்

முன்னதாக, 2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சோனியா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்தார். இதனால், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான், அப்போது அவருக்கு இருந்த மனநிலை குறித்து இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறார். அதாவது, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதும், தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதுமான துயரமான சம்பவங்கள் காரணமாக, சோனியா பிரதமராகக் கூடாது என்பதில் ராகுலும் பிரியங்காவும் உறுதியாக இருந்ததாகவும், அதேசமயம், கூட்டணி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தன்னை பிரதமர் பதவிய ஏற்க்கும் படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தனது மனம் நொடிக்கு நொடி ஊசலாடியதாகவும், தனக்கு வந்த உள்மனக் குரல், "சோனியா, உனக்கு நீயே உண்மையாக இரு. இந்தப் பதவியை ஏற்க வேண்டாம் என்பது உனக்கு எப்போதுமே தெரியும். அதை விட்டுவிடு" என்று தனக்குள் கூறிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவை எடுத்த பின்னர், தனது மகன் ராகுல் காந்தியிடம் சென்று அதனைத் தெரிவித்துள்ளார். அப்போது ராகுல், "இது சரியான முடிவு" என்று கூறி தனது தாய்க்கு ஆதரவு அளித்ததாகவும் சோனியா நினைவுகூர்ந்துள்ளார்.

இதனால், பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்வு செய்வது என்ற கேள்வி எழுந்த நிலையில், 1990-களில் நிதியமைச்சராக இருந்து பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுத்த அனுபவம், நிர்வாகத் திறன், நேர்மை ஆகியவை காரணமாக மன்மோகன் சிங்கைத் தேர்வு செய்ததாக சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

முதலில் பிரதமர் பொறுப்பை ஏற்க மன்மோகன் சிங்கும் தயங்கியதாகவும், பின்னர் அவரைச் சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு, 2004-ல் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இந்த முடிவின் பின்னணியை, தனது சுயசரிதை மூலம் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் சோனியா காந்தி.