‘Belonging: A Journey of Love’ எனப் பெயரிடப்பட்டுள்ள சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்புத்தகத்தில், தனது இளமைக்காலம் தொடங்கி, ராஜீவ் காந்தியுடனான காதல் வாழ்க்கை மற்றும் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் வரை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி.
இந்தச்சூழலில் தான், இந்தப் புத்தகம் குறித்து ஆங்கிக ஊடகம் ஒன்றிற்கு சோனியாகாஅந்தி பேட்டியளித்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்தியாவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது. இதன் காரணமாக ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தச் சூழலில், அவசரநிலையை அமல்படுத்திய முடிவு இந்திரா காந்தியின் குடும்பத்திலேயே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதாக சோனியா காந்தி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கணவர் ராஜீவ் காந்தி, அடுத்த தேர்தல் வரை காத்திருக்குமாறு இந்திரா காந்தியிடம் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி அவசரநிலையை அமல்படுத்த வலியுறுத்தியதாகவும் சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், சஞ்சய் காந்தியின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தியிருந்தால், அவசரநிலைக்குப் பிறகு ஏற்பட்ட பல பாதிப்புகளைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரத்தில், இந்திரா காந்திக்கு அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர்களிடமிருந்தும் அழுத்தம் இருந்ததாகவும், ராஜீவ் காந்தியைப் போல மாறுபட்ட கருத்தைக் கூறியவர்கள் மிகச் சிலரே என்றும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலையின்போது, ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டதையும், நீதிமன்றத்தில் சட்டவிரோதக் காவலை எதிர்த்து முறையிடும் உரிமை நிறுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், அப்போதைய சூழலில் இந்திரா காந்தி பல்வேறு நெருக்கடிகளைச் சமாளிக்கப் போராடியதாகவும் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
எனினும், நெருக்கடி நிலையை இந்திராகாந்தி கொண்டுவந்தது தவறு. அதேசமயம், 1977ஆம் ஆண்டு தேர்தலை அறிவித்ததன் மூலம், அவசரநிலையின் பாதிப்புகளை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.