தேசத்தை இணைக்கும் வண்ணமயமான திருநாள்.. பல்வேறு மாநிலங்கள்; பல்வேறு முறைகள்!!
உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் ராமாயண இதிகாசப்படி ராமன் வனவாசத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடுகளில் தீபம் ஏற்றி இனிப்புகளை பரிமாறுவது வழக்கமாக உள்ளது.
குஜராத்தில் தீபாவளி நாளை புத்தாண்டின் முதல் நாளாக கடைபிடிக்கின்றனர். பஞ்சாபில் தீபாவளி நாளை விடுதலை நாளாக கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் குருவான குரு ஹர்கோபிந்த் சிங் குவாலியர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளாக கருதி இது கொண்டாடப்படுகிறது. வீடுகள், குருத்வாராக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் காளி பூஜை, முன்னோர் வழிபாடு ஆகியவை இந்த நாளின் சிறப்பாகும். ஒடிஷாவிலும் முன்னோர் வழிபாடு இந்நாளில் வழக்கமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் அதிகாலை எண்ணெய் குளியல், தீபங்கள் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பசு உள்ளிட்ட கால்நடைகளை அலங்கரித்து வழிபடுவது தீபாவளி வழக்கமாக உள்ளது. நாகாலாந்தில் இப்பண்டிகை தோக்கு எமாங் என்ற பெயரில் அறுவடைத்திருநாளாக கருதப்படுகிறது. இந்திய வம்சாவளியினர் வசிக்கும் வெளிநாடுகளிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மலேசியாவில் ஹரி தீபாவளி என அழைக்கப்படும் இந்நாள் தேசிய பொது விடுமுறையாக உள்ளது. சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இந்நாளை மக்கள் பல்வேறு சடங்குகளுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
இங்கிலாந்தின் லண்டனில் டிராஃபால்கர் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளிலும் ஃபிஜி, மொரிஷியஸ் போன்ற இந்திய வம்சாவளியினர் மிகுந்த நாடுகளிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும்.

