Sonia Gandhi - Raghul Gandhi ANI
இந்தியா

சோனியா பிரதமராவதை எதிர்த்த ராகுல் : சுயசரிதையில் வெளியான முக்கியத் தகவல்.. இந்திய அரசியலில் பரபரப்பு

தான் பிரதமராவதை தனது வாரிசுகளே தடுத்த சம்பவத்தை தனது சுயசரிதை நூலில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Praveen Joshva L

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள "Belonging: A Journey of Love" என்ற சுயசரிதை புத்தகம் சமீபத்தில் வெளியானது. இதில் தனது வாழ்கையில் நடந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் கூறியுள்ள கருத்து இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தான் பிரதமராவதற்கு தனது வாரிசுகளான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரே எதிர்ப்பு தெரிவித்ததாக சுயசரிதை புத்தகத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் தன்னை வற்புறுத்தியதால் ஒருகட்டத்தில், தான் அரை மனதுடன் பிரதமர் பதவியை ஏற்க சம்மதித்ததாகவும், ஆனால் வீட்டிற்கு வந்ததும் ராகுல், கோபமடைந்து சண்டையிட்டதாகவும், அதன் பின்னரே பிரதமர் பதவியைத் துறந்து டாக்டர் மன்மோகன் சிங்கை முன்மொழிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகளுக்குப் பிறகு, பிரதமர் பதவி என்பது உயிருக்கு ஆபத்தானது என்ற அச்சத்தினால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, தான் பிரதமராக எதிர்ப்பு தெரிவித்ததாக சோனியா காந்தி கூறியுள்ளார். மேலும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அரசு கோப்புகளை வரவழைத்துப் பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும், அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே போல கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்த சரத் பவார், பி.ஏ. சங்மா உள்ளிட்ட தலைவர்கள் தன்னை 'இத்தாலிய வம்சாவளி' (Foreign Origin) என்று கூறிய சம்பவத்தால், தான் காயமடைந்ததாகவும், இதன் காரணமாக கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2011-ஆம் ஆண்டு தனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருந்ததையும், இதற்காக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட விதம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள், எதிர்கட்சித் தலைவர்களுடனான ஆரோக்கியமான உறவுகள், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சிக்காலம் போன்ற பல்வேறு விவரங்களையும் சோனியா காந்தி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.